விமான பயணம் மேற்கொண்டால் ரூ.3.5 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை செலவாகும்; மாறாக, கப்பல் பயணம் மேற்கொண்டால் அதிக செலவு ஏற்படாது என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசின் சார்பில் தலா ஒரு நபருக்கு சுமார் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்வரை மானியமாக அளிக்கப்பட்டு வந்தது. அதன்படி கடந்த ஆண்டில் சிறுபான்மை நலத்துறையின் சார்பில் ரூ. 450 கோடி, ஹஜ் பயணத்திற்கான மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் ஹஜ் பயணிகளுக்கு அளித்து வந்த மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி திடீரென அறிவித்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள அவர், “கண்ணியமான முறையில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு இது.
ஹஜ்மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம் அரசால் ரூ. 750 கோடி சேமிக்க முடியும். இத்தொகை இனி சிறுபான்மை மக்களின் பெண் குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், “தனிப்பட்ட முறையில் ஹஜ் பயணம் சென்றால் ரூ.3.5 லட்சம் முதல் ரூ. 4 லட்சம்வரை பணம் செலவாகும்; அதுவும் விமான பயணம் மேற்கொண்டால் மட்டுமே அதிக செலவு ஏற்படும். மாறாக, மெக்காவிற்கு கப்பல் பயணம் மேற்கொண்டால் அதிக செலவு ஏற்படாது” என்று தெரிவித்துள்ளார்.