காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்பதில் எந்தத் தயக்கமும் இல்லை என முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான தேவ கவுடா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஆட்சியில் சாமானியர்களுக்கு பலனளிக்கும் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா என வெற்று விளம்பரப்படுத்துவதில் தான் மோடிக்கு ஆர்வம் . பிரதமரான உடன் முதல் பேச்சில் ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவேன் என்றார் மோடி. ஆனால் இன்று நிலைமையே வேறு. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரிய பெரிய மனிதர்களுக்கும் தான் மோடி உழைக்கிறார்.
வரும் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக முன்னிறுத்துவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. சுறுசுறுப்பான இளைஞர். காங்கிரஸ் தலைவரான ஓராண்டில் நல்ல அனுபவங்களை பெற்றுள்ளார். ரபேல் விவகாரத்தில் ராகுலின் வாதங்கள் பாராட்டக் கூடியது. ஆனால் உணர்ச்சி வசப்பட்டு பிரதமரை திருடன் என்பது போன்று அநாகரிகமாக விமர்சிப்பது ஏற்புடையதில்லை. ராகுல் காந்தி இன்னும் பக்குவப்பட வேண்டும் என தேவகவுடா கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பேரனுக்காக தமது ஹாசன் தொகுதியை விட்டுக் கொடுத்துள்ளதாக தெரிவித்த தேவகவுடா 87 வயதாகிவிட்டதால் இந்தத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.