நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தமது மகன் திருமணத்திற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை. ஆனால் மத்திய அமைச்சர்கள் பலருக்கும் அழைப்பிதழ் கொடுத்த நிலையில் மோடியை தவிர்த்தது ஏன்? என்ற கேள்வி பா.ஜ.க.வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜ் தாக்கரே மகன் திருமணம் வரும் 27-ந் தேதி மும்பையில் நடக்கிறது. கடந்த வாரம் டெல்லி சென்ற ராஜ் தாக்கரே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான், மேனகா காந்தி ஆகியோருக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.
ஆனால் மோடிக்கு இதுவரை அழைப்பு இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி பா.ஜ.க வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மோடியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் ராஜ் தாக்கரே . சமீப காலமாக மோடியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் மோடிக்கு திருமண பந்தத்தில் உடன்பாடு, நம்பிக்கை உள்ளதா என கிண்டலாக கேள்வி எழுப்பியிருந்தார் ராஜ் தாக்கரே . அதனால் கூட தனது மகன் திருமணத்திற்கு அழைப்பு விடவில்லை என்று தெரிகிறது.