சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது.
இந்தப் புத்தகத் திருவிழா ஜனவரி 20ம் தேதி நிறைவுறும். பொங்கல் விடுமுறை தினங்களில் குடும்பத்தோடு சென்று பிள்ளைகளின் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க இது ஏற்ற தருணமாகும்.
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சியை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர். 42வது சென்னைப் புத்தகக் காட்சி ஜனவரி 4ம் தேதி முதல் ஜனவரி 20ம் தேதி வரை நடத்தப்படுகிறது. விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 9 மணி வரைக்கும், வேலை நாட்களில் பிற்பகல் 2 முதல் இரவு 9 மணி வரைக்கும் அரங்குகள் திறந்திருக்கும். தற்போது பொங்கல் விடுமுறை நாள்களானதால் சென்னைப் புத்தகக் காட்சி காலை 11 மணி முதல் செயல்படும்.
எட்டு நுழைவாயில்களுடன் பிரமாண்டமாக புத்தகக் காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. பிரபல பதிப்பகங்கள் முதல் சிறு பதிப்பகங்கள் வரை வைத்திருக்கும் கடைகளில் வரலாறு, அரசியல், இலக்கியம், சமையல், சிறுவர் இலக்கியம் என அனைத்து வகை புத்தககங்களும் கிடைக்கின்றன.
இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.
ராமசுப்பிரமணியன், தேசாந்திரி பதிப்பகத்தில் தினமும் மாலை 4 மணி முதல் வாசகர்களை சந்திக்கிறார். உயிர்மை பதிப்பகத்தில் கவிஞர் மனுஷ்யபுத்திரனையும், ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் எழுத்தாளர் சாரு நிவேதிதாவையும் வாசகர்கள் சந்தித்து, வாங்கிய புத்தகங்களில் கையெழுத்து பெறுகின்றனர்.
ஒருவருக்கான நுழைவுக் கட்டணம் பத்து ரூபாய். இந்த நுழைவுச் சீட்டுகளுக்கான பரிசு குலுக்கலும் நடைபெறுகிறது. அரங்கில் இலக்கிய ஆளுமைகளில் சிறப்புரைகள் இடம் பெறுகின்றன.
இவை தவிர, அரங்கிற்கு வெளியே பிரமாண்டமான உணவகம் உள்ளது. சிற்றுண்டிகளும், தேநீர், காபி போன்ற பானங்களும் விற்கும் கடைகள் ஏராளம் உள்ளன.
சென்னை மற்றும் சுற்றுபுறங்களில் இருப்போர் தவறாமல் பார்த்திட வேண்டிய ஒன்று, சென்னைப் புத்தகக் காட்சியாகும்.