கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 15 பேரை இழுக்க பா.ஜ.க குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காங்-மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசுக்கு மீண்டும் நெருக்கடி முற்றியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், ம.ஜ.த.கட்சிகள் தனித்தனியாக போட்டி யிட்டனர். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 101-ல் வென்ற பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க ஆளுனர் அழைப்பு விடுத்தார்.காங்கிரஸ் 78, ம.ஜ.த. 37 தொகுதிகளில் வென்ற நிலையில் தேர்தலுக்குப் பின் திடீர் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கவும் உரிமை கோரின.கோரிக்கை நிராகரிக்கப்பட உச்ச நீதிமன்றம் சென்றனர்.
வாக்கெடுப்புக்கு அவகாசம் தராமல் உடனடியாக நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் பதவி விலகினார். பின்னர் குமாரசாமி தலைமையில் காங்-ம.ஜ.த.கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. ஆனால் குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க கங்கணம் கட்டி வரும் பா.ஜ.க தற்போது "ஆபரேசன் லோட்டஸ்" என்று பெயரிட்டு கவிழ்ப்பு முயற்சியில் இறங்கி விட்டது.
சமீப த்தில் பதவி பறிக்கப்பட்ட காங்கிரசின் ரமேஷ் ஜார்க் கோளி, அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருந்த நாகேந்திரா, ஆனந்த் சிங் ஆகிய 3 காங்.எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வளைத்து விட்டதாக தகவல்கள் வெளியாக உள்ளது. மும்பையில் எடியூரப்பாவின் பிடியில் சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை காங்கிரஸ் மூத்த தலைவரும் அமைச்சருமான டி.கே.சிவக்குமார் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் வரும் 16-ந் தேதி அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் உள்ள காங். மூத்த தலைவர் பி.சி. பாட்டீல் தலைமையில் 12 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு அணிமாறப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இவர்களிடம் பா.ஜ.க.க குதிரை பேரம் நடத்தி வருவதாகவும் வெளியாகும் தகவல்களால் குமாரசாமி அரசு எந்த நேரமும் கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்கும் முயற்சிகளிலும் காங்கிரஸ் தலைவர்கள் முழு முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.