லஞ்சம் அதிகம் புழங்கும் வருவாய்த்துறை பதிவுத்துறை: உயர் நீதிமன்றம் கண்டனம்..

Advertisement

வருவாய்த் துறை மற்றும் பத்திரப்பதிவு துறையில் பணியாற்றுவோர் அதிக அளவில் லஞ்சம் பெற்று வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்க்கின்றனர் எனஉயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.கரூரைச் சேர்ந்த செந்தில் என்பவர் தனது நிலத்தின் சர்வே எண்ணின் உள்ள தவறை சரி செய்ய வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பலமுறை விண்ணப்பித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மண்மங்கலம் வட்டாட்சியருக்கு இதுகுறித்து உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நில அளவீடு குறித்து
வட்டாட்சியரின் கடிதத்தின் மீது 2 ஆண்டாக நடவடிக்கை எடுக்காத வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவரத்தை அவரது பணிப்பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். அரசுத் துறைகளில் வருவாய்த் துறையிலிருந்து தான் லஞ்சம் தொடங்குகிறது.

வருவாய்த்துறையில் பணிபுரியும் வட்டாட்சியர்கள், நில அளவையர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், கோட்டாட்சியர்கள் தான் நில அளவை தொடர்பான ஆவணங்களைத் திருத்தம் செய்கின்றனர். அவர்களில் பலர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்களைக் குவிக்கின்றனர்.இது போன்றே பத்திர பதிவுத்துறையில் பெரும்பாலான மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்கள், ஊழியர்கள் செயல்படுகின்றனர். பதிவுத்துறையில் பெரும்பாலான வேலைகள் மேஜைக்கு அடியில் தான் நடைபெறுகிறது. லஞ்சம் வாங்கிக் கொடுப்பதில் பத்திரப்பதிவு எழுத்தர்கள் ஏஜெண்டுகளாகத்தான் செயல்படுகின்றனர்.லஞ்சம் மற்றும் ஊழலில் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளையும் குறைத்து மதிப்பிட முடியாது.

அவர்களும் வருவாய் மற்றும் பத்திரப்பதிவுத்துறையுடன் சரிசமமாகப் போட்டியிடுகின்றனர்.ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டிருந்தால் அரசு அதிகாரிகள் ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்கள் வெளி உலகத்திற்குத் தெரிய வரும் .இந்த வழக்கில் தொடர்புடைய 2018-ல் பணிபுரிந்த வட்டார வளர்ச்சி அலுவலரின் ஆதார் எண், செல்போன் எண் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.அதைத் தொடர்ந்து வரும் நவம்பர் 5ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement
/body>