குழந்தைகளின் இரும்பு சத்து குறைபாட்டை நீக்குவது எப்படி?

How To Prevent Iron Deficiency In Children?

by SAM ASIR, Mar 25, 2019, 14:00 PM IST
'அயர்ன்' என்னும் இரும்பு சத்து, நுரையீரலிலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு உயிர்வளியாகிய ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதற்கு உதவுகிறது. தசைகளில் உயிர்வளி தேக்கப்படுவதற்கு இரும்பு சத்து அவசியம். உடலில் இரும்பு சத்து குறைபடும்போது, அனீமியா என்னும் இரத்த சோகை நோய் ஏற்படும்.
 
பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் இரும்பு சத்து அவசியமாகும். இரும்பு சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சிவப்பு இரத்த அணுக்கள் ஆரோக்கியம் குன்றும். ஆகவே, உடல் மற்றும் மன வளர்ச்சியில் தேக்கநிலை உருவாகும். 
 
குழந்தைகளுக்கு இரும்பு சத்து குறைபாடு ஏன் உண்டாகிறது?
உரிய காலத்திற்கு முன்பே பிறந்திடும் குழந்தைகள் மற்றும் போதிய எடை இல்லாமல் பிறந்திடும் குழந்தைகளுக்கு இரும்பு சத்து குறைபாடு உண்டாகலாம். 
 
ஒருவயதுக்கு முன்னரே பசும்பால் அருந்திடும் குழந்தைகளுக்கும் இச்சத்து குறைபடலாம்.
தாய்ப்பால் அருந்திடும் குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்குப் பிறகு கூடுதலாக இரும்பு சத்து நிறைந்த இணை உணவு (complementary)கொடுக்கப்படாவிட்டால் இரும்பு சத்து குறைபடலாம்.
 
ஒன்று முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகள் தினமும் 710 மில்லி லிட்டருக்கு மேல் பசும்பால் அல்லது ஆட்டுப்பால் அருந்துவதால் இக்குறைபாடு உண்டாகலாம்.
நாட்பட்ட நோய்தொற்று பாதிப்பு உள்ள மற்றும் பத்திய உணவு (restricted diets) சாப்பிடும் குழந்தைகளுக்கு இரும்பு சத்து குறைவுபடுவதற்கு வாய்ப்பு உண்டு.
 
சுவாசித்தல் மற்றும் உணவு மூலம் ஈயம் உடலில் சேர்ந்த ஒன்று முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கும் இச்சத்து குறைவுபடும்.
 
பதின்பருவ பெண்களுக்கு இரத்தப்போக்கினால் இரும்பு சத்து குறைவுபடலாம்.
இரும்பு சத்து குறைபாட்டின் அறிகுறிகள்:
 
குழந்தைகளின் தோல் வெளிறி இருத்தல், சோர்வு மற்றும் அசதியாக உணர்தல், மன வளர்ச்சி மற்றும் மற்றவர்களுடன் பழகும் தன்மையில் குறைபாடு காணப்படுதல், நாக்கில் வீக்கம், உடல்வெப்பநிலையில் குளறுபடி, அதிக நோய்தொற்று போன்ற
 
அறிகுறிகள் இருந்தால் இரும்பு சத்து குறைபாடு உள்ளது என தெரிந்து கொள்ளலாம்.
 
இரும்பு சத்து குறைபாட்டை எப்படி தடுக்கலாம்?
ஒருவயது வரைக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்கப்படாவிட்டால், பச்சிளம் குழந்தைக்கான இரும்பு சத்து அடங்கிய இணை உணவு தரப்பட வேண்டும்.
 
நான்கு முதல் ஆறு மாத குழந்தைகளுக்கு திட உணவு ஊட்ட ஆரம்பித்தால் இரும்பு சத்து நிறைந்த சரிவிகித உணவு வழங்க வேண்டும். வளர்ந்த குழந்தைகளுக்கு ஆட்டிறைச்சி, கோழி, மீன் மற்றும் தாவர உணவுகளை தர வேண்டும்.
 
ஒன்று முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒருநாளுக்கு 710 மில்லி லிட்டருக்கு அதிகமாக பால் கொடுக்கக்கூடாது.
 
உணவிலிருந்து இரும்பு சத்தை எடுத்துக்கொள்ள வைட்டமின் சி உதவுகிறது. ஆகவே, வைட்டமின் சி அதிகமுள்ள கிர்ணி பழம் என்ற முலாம்பழம், தர்பூசணி வகை, ஸ்டிராபெர்ரி பழங்களையும், உருளைக்கிழங்கு, தக்காளி  போன்றவை அடங்கிய உணவினையும் கொடுக்க வேண்டும்.
 
மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இதர துணை மற்றும் இணை உணவுகளை குழந்தைகளுக்கு தருவதால் இரும்பு சத்து குறைபாட்டினை தவிர்க்கலாம்.

You'r reading குழந்தைகளின் இரும்பு சத்து குறைபாட்டை நீக்குவது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை