குடும்ப மருத்துவர்: சமுதாயத்தின் தேவை (ஜூலை 1 - தேசிய மருத்துவர் தினம்)

National Doctors Day 2019, Current Theme, History and Objectives

by SAM ASIR, Jul 1, 2019, 17:41 PM IST

மருத்துவரின் பணிகள், முக்கியத்துவம் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணமும் சமுதாயத்திற்கும் நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் சேவை புரியும் மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தும் வண்ணமும் இந்தியாவில் ஜூலை 1ம் தேதி, தேசிய மருத்துவர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

புகழ்பெற்ற மருத்துவராக விளங்கியவரும் மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக பதவி வகித்தவருமான மருத்துவர் பிதன் சந்திர ராய் என்ற பி.சி. ராயை கனப்படுத்தும் விதமாக அவரது பிறந்த மற்றும் மறைந்த நாளான ஜூலை 1ம் தேதி, தேசிய மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. 1882ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதி பிறந்த பிதன் சந்திர ராய் 1962ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி மறைந்தார். 1961ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

தற்போது இந்தியாவில் பல்நோக்கு மருத்துவமனைகளின் யுகம் நடைபெற்று வருகிறது. குடும்ப மருத்துவர் என்ற பதமே இப்பொழுது புழக்கத்தில் இல்லை. மாறாக, இன்று மக்கள் நேரடியாக உயர் சிறப்பு மருத்துவர்களை அணுகவேண்டிய நிலை உள்ளது. உயர்சிறப்பு மருத்துவர்கள் ஆய்வக அறிக்கைகள், சி.டி அல்லது எம்ஆர்ஐ என்னும் சோதனைகளின் அறிக்கைகளின் அடிப்படையிலேயே சிகிச்சையை மேற்கொள்ளுகின்றனர்.

நம் நாட்டு மருத்துவ கல்லூரிகளில் பெரும்பாலும் உயர் சிறப்பு மருத்துவர்களே பயிற்றுவிக்கின்றர். குடும்ப மருத்துவர்களாக சேவை புரிபவர்கள் கல்வி தகுதி காரணமாக பேராசியர்களாக நியமிக்கப்படுவதில்லை. ஆகவே, மருத்துவ மாணவர்கள் உயர் சிறப்பு மருத்துவர்களே தங்கள் முன்னுதாரணமாக கொள்கின்றனர். அதனால் எதிர்காலத்தில் அவர்களும் குடும்ப மருத்துவர் என்ற சேவையை தேர்ந்தெடுப்பதில்லை என்ற கருத்தும் பரவலாக நிலவி வருகிறது.

உடல் நலக் குறைவு என்று மருத்துவமனைக்குச் சென்று விட்டாலே ஒருவர் மாற்றி இன்னொருவர் என்று உயர் சிறப்பு மருத்துவர்களிடமே மக்கள் மாறி மாறி செல்லவேண்டியுள்ளது. முழு உடலுக்கும் சிகிச்சையளிக்கக்கூடிய பொது நல மருத்துவர்களே இன்று இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. முதுமை காரணமாக பல்வேறு உடல்நல பாதிப்புகளால் அல்லலுறும் முதியவர்கள் எந்த மருத்துவரிடம் செல்வது என்று பரிதவிப்பதையும் பார்க்க முடிகிறது. முழு உடல் நல விவரங்களையும் குடும்பத்தையும் பற்றி அறிந்த மருத்துவர் இல்லாத காரணத்தால் மூப்பு காரணமாக உயிரிழப்போருக்கு மருத்துவரின் இறப்புச் சான்றிதழ் பெறுவதும் சிரமத்திற்குரிய ஒன்றாக உள்ளது.

இந்திய குடும்ப மருத்துவர்கள் கழகம் 2010ம் ஆண்டு எழுப்பிய கோரிக்கையின்படி, மத்திய சுகாதார அமைச்சகம் சுகாதார துறை செயலரின் தலைமையில் குடும்ப மருத்துவம் என்ற துறையின் பட்ட மேற்படிப்பை ஆரம்பிப்பது குறித்து விவாதிக்க ஓர் உயர்மட்ட குழுவை நியமித்தது. கோரிக்கையின் அவசியத்தை கருத்தில் கொண்டு மாநில அரசுகள், அரசு மருத்துவ கல்லூரிகளில் குடும்ப மருத்துவம் என்ற பிரிவில் பட்டமேற்படிப்புகளை தொடங்கவேண்டும் என்றும் அதற்கான உள்கட்டமைப்பு, மருத்துவ பேராசிரியர்கள் மற்றும் நிதி தேவைகளை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் இல்லை.

2016ம் ஆண்டு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் 92வது அறிக்கையில் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மாநில அரசாங்கங்களின் ஒருங்கிணைப்புடன் குடும்ப மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பு தொடங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அது குறித்து கடந்த ஆண்டு இந்திய குடும்ப மருத்துவர்கள் கழகம் உச்ச நீதி மன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கில் மத்திய அரசு ஏற்கனவே இதை கருத்தில் கொண்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவு சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் சுகாதார துறையை அணுகுமாறு நீதிபதிகள் வழிகாட்டியுள்ளனர்.

தமிழக புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமனம் ; டிஜிபி பதவியில் திரிபாதி

You'r reading குடும்ப மருத்துவர்: சமுதாயத்தின் தேவை (ஜூலை 1 - தேசிய மருத்துவர் தினம்) Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை