கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. விரைவில் அந்த ஆட்சி கவிழ்ந்து, பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு தெரிகிறது.
கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ம.ஜ.த. வெறும் 37 எம்.எல்.ஏ.க்களையும், காங்கிரஸ் 80 எம்.எல்.ஏ.க்களையும் கொண்டிருக்க, பா.ஜ.க. 107 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கிறது.
எனவே, பா.ஜ.க.வுக்கு 7 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் கூடுதலாக கிடைத்தால் போதும் என்ற நிலையில், அங்கு காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் பணியில் பா.ஜ.க.வினர் இறங்கியுள்ளனர். ரமேஷ் ஜரிகோலி என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. தலைமையில் அக்கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தயாராக உள்ளதாகவும், அவர்களிடம் பேரம் பேசப்பட்டு வருவதாகவும் கடந்த மாதமே தகவல்கள் வெளியாகின.
அந்த எம்.எல்.ஏ.க்களுக்காக கோவாவில் பா.ஜ.க. ஒரு ரிசார்ட்ஸ் புக் பண்ணி வைத்திருப்பதாக கூட தகவல்கள் கசிந்தன. ஆனால், காங்கிரஸ் தலைமை உடனடியாக தலையிட்டு ரமேஷ் ஜரிகோலியை சமாதானப்படுத்தி வைத்தது.
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆனந்த்சிங் மற்றும் ரமேஷ் ஜரிகோலி ஆகிய 2 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். பின்னர் ஆனந்த் சிங், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘எனது தொகுதியி்ல் உள்ள நிலங்களை ஜிண்டால் நிறுவனத்திற்கு ஆர்ஜிதம் செய்து கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளேன்’’ என்றார்.
இவரைத் தொடர்ந்து ரமேஷ் ஜரிகோலியும் ராஜினாமா செய்த தகவல் வெளியாகியுள்ளது. இவர்களைப் போல் இன்னும் ஐந்தாறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து விடும்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள குமாரசாமி வெளியிட்ட ட்விட்டில் ‘‘நான் காலபைரவேஸ்வர கோயில் பவுண்டேஷன் அடிக்கல் நாட்டு விழாவுக்காக நியூஜெர்சிக்கு வந்துள்ளேன். நான் டி.வி. சேனல்களை கவனித்தேன். பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க நினைப்பது பகல் கனவு. அது நிறைவேறாது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா கூறுகையில், ‘‘குமாரசாமி ஆட்சியைக் கவிழ்க்க நாங்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆட்சி தானாகவே கவிழும்’’ என்று தெரிவித்தார்.