அரிசி பெரும்பாலும் ஆசியாவின் பல பகுதிகளில் முக்கியமான உணவுப் பொருள்.தென்னிந்தியாவில் அரிசி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தற்போது வெள்ளை அரிசியை காட்டிலும் சிவப்பு அரிசி உடலுக்கு நல்லது என்ற கருத்து பரவி வருகிறது. 'வெள்ளை', 'சிவப்பு' என்ற இந்தப் பிரிவு எப்படி வந்தது? வெள்ளை அரிசியை மக்கள் ஏன் அதிகம் விரும்புகிறார்கள் என்று பார்க்கலாம்.
சிவப்பு அரிசி:
அரிசியின் மூலம் நெல் ஆகும். நெல்லிலிருந்துதான் அரிசி கிடைக்கிறது. நெல்லில் உமி, தவிடு, அரிசி என்ற மூன்று பொருள்கள் உள்ளன. வெள்ளை அரிசி என்பது, உமி, தவிடு முற்றிலும் நீக்கப்பட்டதாகும். தவிடு முற்றிலும் நீக்கப்படாத அதாவது தீட்டப்படாத அரிசியே சிவப்பு அரிசி (brown rice) என்று அழைக்கப்படுகிறது.
சமைக்க எளிது:
கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு வாழும் பரபரப்பான வாழ்க்கையில் எளிதாக சமைக்கக்கூடியவற்றையே நாம் நாடுகிறோம். சிவப்பு அரிசியை சமைப்பதற்கு அதிக நேரமும் எரிபொருளும் தேவை. ஆனால், வெள்ளை அரிசியை சமைப்பதற்கு குறைந்த நேரமே போதும். ஆகவே, வெள்ளை அரிசியை மக்கள் விரும்புகின்றனர்.
ஜீரணிக்க எளிது
தீட்டப்படாத (unpolished) சிவப்பு அரிசி தவிடு சேர்ந்திருப்பதால், நார்ச்சத்து அதிகம். ஆகவே, சிவப்பு அரிசி சாதம் செரிப்பதற்கு நேரம் ஆகும். வெள்ளை அரிசி சாதம் எளிதாக செரிக்கக்கூடியது. குறைவாக நார்ச்சத்து போதும் என்பவர்கள் வெள்ளை அரிசி சோற்றையே உண்ண விரும்புகின்றனர். வயிற்றுப்போக்கு இருப்பவர்கள்கூட வெள்ளை அரிசியை சமைத்து உண்ணலாம்.
கார்போஹைடிரேட் அதிகம்
வெள்ளை அரிசி, நெல்லின் எண்டோஸ்பெர்ம் என்ற பகுதியை மட்டுமே கொண்டது. இப்பகுதி அதிக மாவுச்சத்து (கார்போஹைடிரேட்) அடங்கியது. ஆகவே, இதை உண்டால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். அதிக ஆற்றல் தேவைப்படும் தடகள வீரர்கள், சிவப்பு அரிசியைக் காட்டிலும் வெள்ளை அரிசியையே உண்கின்றனர். இழந்த குளூக்கோஸை மறுபடியுமாக உடலில் சேர்த்துக்கொள்வற்கு வெள்ளை அரிசி உணவு பொருள்கள் உதவுகின்றன.
வயிற்றுக்குப் பாதுகாப்பு
சிவப்பு அரிசியில் தவிட்டின் அளவு அதிகம் இருக்கும். தவிட்டில் ஆர்சனிக் என்ற வேதிப்பொருள் இருக்கும். ஒப்புநோக்க வெள்ளை அரிசியை காட்டிலும் சிவப்பு அரிசியில் 50 விழுக்காடு அதிகம் ஆர்சனிக் உள்ளது. தினசரி சிவப்பு அரிசி உணவை சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள ஆர்சனிக் வயிற்றிலுள்ள உறுப்புகளை பாதிக்கும்.
நச்சுத்தன்மை இல்லை
சிவப்பு அரிசியில் தவிடு (bran) சேர்ந்திருக்கும். தவிட்டிலிருந்து எண்ணெய் கூட எடுக்கப்படுகிறது. தவிட்டில் எண்ணெய்ச் சத்து இருப்பதால் குறிப்பிட்ட வெப்பநிலையில் அதை இருப்பில் வைத்திருக்கும்போது அதிலுள்ள எண்ணெய் நச்சுத்தன்மை கொண்டதாகிறது. தவிடு நீக்கப்பட்ட வெள்ளை அரிசியில் இந்த அச்சம் இல்லை. ஏதாவது நச்சுத்தன்மை இருப்பினும் சமைக்கும்போது அது நீக்கப்பட்டுவிடும்.
ஃபோலேட் சத்து
எலும்பு மஜ்ஜையில் இரத்தத்தின் சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்கள் உருவாகிய ஃபோலிக் அமிலம் எனப்படும் ஃபோலேட் சத்து தேவை. இது வைட்டமின் பி-9 என அறியப்படுகிறது. கார்போஹைடிரேட்டை உடைத்து உடலுக்கு ஆற்றலாக மாற்றுவது ஃபோலேட் தான். கர்ப்பிணி பெண்கள் போதுமான அளவு ஃபோலிக் அமிலம் சேர்த்துக்கொள்ளாதிருந்தால் பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது. ஃபோலேட் குறைபாட்டினால் அல்லலுறுகின்றவர்களுக்கு வெள்ளை அரிசி உணவுப் பொருள்கள் ஏற்றது.
கிளைசெமிக் குறியீடு
ஓர் உணவு உடலின் இரத்தத்தின் சர்க்கரை அளவில் ஏற்படுத்தும் தாக்கத்தை குறிப்பது அதன் கிளைசெமிக் குறியீடு ஆகும். குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவு பொருள்கள் மெதுவாக செரிக்கும். வெள்ளை அரிசியின் கிளைசெமிக் குறியீடு அதிகம். ஆகவே, அது வேகமாக உடைந்து குளூக்கோஸாக மாறுகிறது. சிவப்பு அரிசி குளூக்கோஸாக மாறுவதற்கு நேரம் பிடிக்கும்.