உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கரும் விலகியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் சோகம் தொடர்கிறது .
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து வெற்றிக்கு காரணமாக இருந்த அதிரடி துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், அந்தப் போட்டியில் கை பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலக நேர்ந்தது. அவருக்குப் பதிலாக தமிழக வீரர் விஜய்சங்கர் அணியில் இடம் பிடித்து ஓரளவுக்கு சாதித்து வந்தார். அடுத்து புயல் வேக பந்து வீச்சாளர் புவனேஷ்குமாரும் தசைப்பிடிப்பு ஏற்பட்டு விலகினார். அவருக்குப் பதிலாக முகமது சமி அணியில் இடம் பிடித்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த விஜய்சங்கருக்கு பும்ரா வீசிய பந்தில் கால் விரலில் காயம் பட்டது. இதனால் நேற்றைய போட்டியில் அவர் பங்கேற்க முடியாமல், ரிஷப் பன்டுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்தப் போட்டியில் இந்தியா தோற்றுவிட்டது.
இதற்கிடையே கால் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விஜய்சங்கர் இந்த உலகக் கோப்பை தொடரில் இருந்தே விலகுகிறார் என்ற அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. விஜய் சங்கருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, 5-ல் வெற்றி, ஒரு தோல்வி, ஒரு போட்டி மழையால் ரத்து என 11 புள்ளிகள் பெற்றிருந்தாலும் அரையிறுதி வாய்ப்பு இன்னும் உறுதியாகவில்லை. இந்தியா அடுத்து நடைபெற உள்ள வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் ஏதேனும் ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.