இந்திய அணிக்கு காவி நிறம் ராசியாகுமா? இங்கிலாந்துடன் பலப்பரீட்சை

CWC, India plays with orange jersey in the match against England today

by Nagaraj, Jun 30, 2019, 10:24 AM IST

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் காவி நிற சீருடையுடன் இந்தியா களமிறங்குகிறது. இந்தப் போட்டியில் வென்றால் இந்தியா ஜம்மென அரையிறுதியில் நுழைய முடியம் என்பதால் காவி ராசியும் கை கொடுக்குமா? என்பது தெரிந்துவிடும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா இதுவரை ஆடிய போட்டிகளில் தோல்வியே காணாமல் வெற்றிகளை ருசித்து வருகிறது. இதுவரை ஆடியுள்ள 6 போட்டிகளில் 5-ல் வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து என 11 புள்ளிகளுடன் பட்டியலில் 2-ம் இடம் வகிக்கிறது. இன்னும் 3 போட்டிகளில் ஆட உள்ள இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் போதும் அரையிறுதியை உறுதி செய்து விடலாம்.


இந்நிலையில் பர்மிங்காமில் இன்று இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. இங்கிலாந்து அணியின் சீருடையும் நீல நிறம் என்பதால் இந்தப் போட்டியில் மட்டும் இந்திய அணி வீரர்களின் சீருடை காவி நிறத்திற்கு மாறுகிறது. காவி நிறத்தை தேர்வு செய்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவி நிற ராசி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தருமா? என்ற சூடான விவாதங்களும் இப்போது எழுந்துள்ளது.


போட்டி நடைபெறும் பர்மிங்காம் மைதானமும் இந்திய அணிக்கு ராசியானது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 7-ல் இந்தியா வெற்றியை ருசித்துள்ளது. அதில் இங்கிலாந்துக்கு எதிராக மட்டும் 4 போட்டிகளில் 3-ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளதும்,2013-க்குப் பின் இந்த மைதானத்தில் விளையாடிய 5 போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


இன்றைய போட்டி இத்தொடரை நடத்தும் இங்கிலாந்து அணிக்கு வாழ்வா? சாவா? என்ற அளவுக்கு அமைந்துள்ளது. இன்று தோற்றால் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்பதால், இங்கிலாந்து வீரர்களும் வெற்றிக்கு போராடுவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை எனலாம்.

You'r reading இந்திய அணிக்கு காவி நிறம் ராசியாகுமா? இங்கிலாந்துடன் பலப்பரீட்சை Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை