ரூ. 2 கோடி செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமாருக்கும் அவரது மனைவி ராதிகா சரத்குமாருக்கும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில், ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் 2014-ம் ஆண்டு ரூ.1.5 கோடி கடன் வாங்கியுள்ளனர். இதற்காக 2 வங்கி செக்குகளை கொடுத்துள்ளனர். மேலும் ரூ.50 லட்சம் ரொக்கமாக வாங்கியதற்கும் 5 செக்குகள் என மொத்தம் 7 செக் குகளை இருவரும் அளித்துள்ளனர்.
குறிப்பிட்ட காலத்தில் கடனாக வாங்கிய ரூ 2 கோடி பணத்தை இருவரும் திருப்பி செலுத்தவில்லை. வங்கி செக்கும் பணமில்லை என்று திரும்பி வந்துள்ளது. இதனால் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ராடியன்ஸ் நிறுவனம் சார்பில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சரத்குமார், மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இருவரின் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை 3-வது விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு சைதாப்பேட்டை 3-வது விரைவு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இதையடுத்து இருவருக்கும் எதிராக ஜாமீனில் வெளிவரக் கூடிய கைது வாரண்ட் பிறப்பித்த நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 12-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.