சிறுநீரக செயலிழப்பு ஏன் நேரிடுகிறது? எப்படி தவிர்க்கலாம்?

by SAM ASIR, Sep 13, 2020, 18:25 PM IST

'டயாலிசிஸ்' - அன்றாடம் அடிக்கடி கேள்விப்படுகிற வார்த்தையாகிவிட்டது. அதனுடன் தொடர்புடையது சிறுநீரக செயலிழப்பு. சிறுநீரகம் செயலிழந்துவிடுவதால், சிறுநீரகம் செய்கின்ற வேலையை செயற்கைமுறையில் செய்வதே டயாலிசிஸ். உலக அளவில் 10 சதவீதம் மக்கள் சிறுநீரக நோய் மற்றும் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இப்பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள ஒரு புள்ளிவிவரம், ஆண்டுதோறும் இந்தியாவில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு சிறுநீரக பாதிப்பு கண்டுபிடிக்கப்படுகிறது என்று தெரிவிக்கிறது.

காரணங்கள்

இந்தியாவில் இரத்தக் கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) மற்றும் நீரிழிவால் அநேகர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை இரண்டுமே சிறுநீரக நோய்க்கு பொதுவான காரணங்களாக இருக்கின்றன.

வெளிப்புறமான அல்லது உடலின் உள்புறமான தாக்குதலால் சிறுநீரகம் பாதிக்கப்படுதல், நோய் எதிர்ப்பாற்றலில் ஏற்படும் குளறுபடி, வேதி மற்றும் மாசு நச்சுப்பொருள்கள், தீவிர நீர்ச்சத்து குறைபாடு ஆகியவை சிறுநீரக நோய்களுக்குக் காரணமாகின்றன. இரத்த ஓட்டம் குறைவு, ஒவ்வாமை போன்றவைகளும் பாதிப்புக்கு காரணமாகலாம். ஆண்களை விட பெண்களே அதிகமாக சிறுநீரக பிரச்னையில் சிக்கிக்கொள்கின்றனர். சிறுநீர்ப் பாதை தொற்று இதற்கு வழிவகுக்கிறது.

சிறுநீரக பாதிப்பை முதற்கட்டத்தில் கண்டறிந்தால் வாழ்வியல் முறையை மாற்றுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். ஆனால் பெரும்பாலானோருக்கு நான்காம், ஐந்தாம் கட்டங்களில்தான் இது கண்டுபிடிக்கப்படுகிறது. அதன்பிறகு அதை குணப்படுத்தமுடியாமல் போகிறது.

அறிகுறிகள்

சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள் சிலருக்கு தெரியாமலே இருக்கக்கூடும். வெவ்வேறு நபருக்கு வெவ்வேறு விதமான அறிகுறிகளை சிறுநீரக பாதிப்பு கொடுக்கக்கூடும். ஆகவே, இப்பாதிப்பை மிக நுட்பமாகவே கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

சிறுநீர் கழிப்பதில் சிரமம், உடலுக்குள் நீர் தங்குவதால் ஏற்படும் வீக்கம், மூச்சிரைப்பு, குழப்பமான மனம், குமட்டல் போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் சிறுநீரகத்தை பரிசோதனை செய்யவேண்டும்.

சிகிச்சை

பாதிப்பின் தீவிரத்தன்மையை பொறுத்து சிகிச்சை முறையும் மாறுகிறது. மருந்து, இம்யூனோதெரபி ஆகியவையும் டயாலிசிஸ் என்னும் செயற்கை சிறுநீரக செயல்பாடும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் இதற்கான நிவாரணங்களாகும்.

சிறுநீரக பாதிப்புள்ளோர் உணவுமுறையையும் வாழ்வியல் முறையையும் மிக கவனமாக கடைப்பிடிக்கவேண்டும். பொதுவாக சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துகள் குறைவாக உள்ளவற்றை சாப்பிடவேண்டும். சிலருக்கு புரதத்தை தவிர்க்கும்படியும் கூறப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு பாதிப்புள்ளோர் தங்கள் வாழ்க்கை முறையை மிகவும் கவனமாக மாற்றியமைத்து, கண்டிப்புடன் கடைப்பிடித்தால் சிறுநீரக பாதிப்பை தவிர்க்கலாம்.


More Health News

அதிகம் படித்தவை