தேமல் குணமாகும்... நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்... கூந்தல் வளரும்...

by SAM ASIR, Sep 16, 2020, 21:35 PM IST

புடலங்காய் நாம் வாரம் ஒருமுறையாவது சமையலுக்குப் பயன்படுத்தும் காயாகும். இது நீர்ச்சத்து அதிகம் கொண்டது. 100 கிராம் புடலங்காயில் 86.2 கலோரி, கொழுப்பு 3.9 கிராம், சோடியம் 33 மி.கி., பொட்டாசியம் 359.1 மி.கி., நார்ச்சத்து 0.6 கிராம், புரதம் 2 கிராம், வைட்டமின் ஏ 9.8 சதவீதம், வைட்டமின் பி6 11.3 சதவீதம், வைட்டமின் சி 30.6 சதவீதம், கால்சியம் 5.1 சதவீதம், இரும்புச்சத்து 5.7 சதவீதம் உள்ளது.

இது பல்வேறு மருத்துவகுணங்களை கொண்டது.

காய்ச்சல்

தீபகற்ப நாடுகளில் காய்ச்சல் அதிகமாக வரக்கூடிய நோய் அறிகுறி. காய்ச்சலால் அவதிப்படுவோருக்கு புடலங்காய் கொடுத்தால் ஒரே இரவில் காய்ச்சல் குறைந்து, உடல் இயற்கையாக தன்னை குணப்படுத்திக்கொள்ள தொடங்கும்.

நச்சுத்தன்மை

புடலங்காய் பாரம்பரிய மருத்துவத்தில் பல்லாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஈரலின் செயல்பாட்டை தூண்டுகிறது. சிறுநீர் பிரிதலை அதிகரிக்கிறது. அதன் மூலமாக உடலிலுள்ள நச்சுப்பொருளை நீக்குகிறது. உடலில் திரவத்தின் அளவை அதிகரிப்பதன் மூலம் உடல் வறட்சியையும் நீர் இழப்பையும் தடுக்கிறது. சிறுநீரகத்தை இயல்பாக வேலை செய்ய வைக்கிறது.

தேமல்

புடலங்காயை 6 அங்குலத்திற்கு வெட்டி, குடலை நீக்கி, சீயக்காயை அரைத்து அதனுள்ளே வைத்து, வெய்யிலில் ஒரு நாள் காய வைக்கவும். மறு நாள் அதை அரைத்து தேமல் உள்ள இடங்களில் தடவி, ஊறவைத்து வெந்நீரில் குளிக்கவும். தொடர்ந்து இது போல செய்து வந்தால் சில தினங்களில் தேமல் மறைந்து விடும்.

செரிமானம்

மலம் கழிப்பதில் குழந்தைகளுக்கு உள்ள பிரச்னையை மலமிளக்கியாக புடலங்காய் தீர்க்கிறது. புடலங்காயில் நார்ச்சத்து அதிகம். ஆகவே மலச்சிக்கலை தீர்க்கிறது.

சுவாச மண்டலம்

நெஞ்சில் கட்டும் சளியை புடலங்காய் நீக்கும். சுவாச குழலில் உள்ள பிரச்னையை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து சளியை அகற்றுகிறது.

கூந்தல் வளர்ச்சி

புதிதாக கூந்தல் வளர்ச்சியை புடலங்காய் தூண்டுகிறது. புடலங்காயிலுள்ள கரோட்டின் சருமத்தையும் கூந்தலையும் பராமரிக்கிறது. பொடுகு தொல்லையை குறைக்கிறது.

புடலங்காய் கூட்டு

தேவையானவை:

புடலங்காய் - 1 கிண்ணம் (நறுக்கியது), துவரம் பருப்பு அல்லது கடலைப் பருப்பு - அரை கிண்ணம், இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை, சீரகம் - 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - 2, கடுகு - அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிது, தேங்காய்த் துருவல் - 3 முதல் 4 மேசைக்கரண்டி, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, தேவைக்கேற்ப உப்பு


செய்முறை:
தேங்காய், மஞ்சள் தூள், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது அரைக்கவும். மையாக அரைக்கவேண்டாம். பருப்பை தனியே பிரஷர் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். இஞ்சி-பூண்டு விழுது, பெருங்காயத் தூள் சேர்க்கவும். புடலங்காய் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். காய் முக்கால் பாகம் வெந்ததும் பருப்பையும் உப்பையும் சேர்த்து இன்னும் சிறிது வேக விடவும். அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.

READ MORE ABOUT :

More Health News

அதிகம் படித்தவை