மூக்கில் ஏற்படும் தொல்லைகள் கோவிட்-19 கிருமியின் அறிகுறிகளாக இருக்குமா?

Are nasal congestion symptoms of Govt-19 infection?

by SAM ASIR, Oct 10, 2020, 16:21 PM IST

கொரோனா வைரஸ் உலகமெங்கும் இன்னும் பரவிக்கொண்டுள்ளது. இதுவரை உலக அளவில் ஏறத்தாழ 3 கோடியே 70 லட்சம் பேர் இந்தக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 10 லட்சத்துக்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதுமுள்ள மருத்துவம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் முயன்றும் இன்னும் கொரோனா கிருமிக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பாதுகாப்பான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட இன்னும் நான்கு முதல் ஆறு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

அதற்குப் பின்னரும் உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பு மருந்து கிடைப்பதற்கு சில ஆண்டுகள் கூட பிடிக்கக்கூடும். இந்நிலையில் நோய் பரவாமல் எச்சரிக்கையாயிருப்பதே அதைத் தடுக்கக்கூடியதாகும்.

மூக்கில் ஏற்படும் உபாதைகள்

இப்போது பலர் வீட்டை விட்டு வெளியே வர ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தொற்று பரவலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மூச்சுவிடுதலில் சிரமம், காய்ச்சல், வறட்டு இருமல் ஆகியவையே கோவிட்-19 கிருமித் தொற்றின் அறிகுறிகளாக ஆரம்பத்தில் கருதப்பட்டன. இப்போது வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு அறிகுறிகளை கொரோனா பாதிப்பு ஏற்படுத்துகிறது. முன்பு மூக்கு ஒழுகுதலும் மூக்கடைப்பும் கோவிட்-19 பாதிப்பின் அறிகுறிகள் அல்ல என்று கூறப்பட்டது. இப்போது கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளோர் சிலருக்கு மூக்கு ஒழுகுதலும் மூக்கடைப்பும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

மூக்கு ஒழுகுவதையும் மூக்கடைப்பையும் சாதாரண சளி அல்லது இன்ஃப்ளூயன்ஸா என்று கருதி விட வாய்ப்புள்ளது. மூச்சுவிடுதலில் சிரமம், காய்ச்சல், வறட்டு இருமல் உள்ளிட்ட வேறு அறிகுறிகள் இல்லாமல் மூக்கு ஒழுகுதலும் மூக்கடைப்பும் மட்டும் இருந்தால் பொதுவாக அதைச் சாதாரண பிரச்சனையாகக் கருதி அலட்சியமாக இருந்து விடுவர்.

கோவிட்-19 பாதிப்பு எனக் கண்டுபிடிப்பது எப்படி?

சாதாரண சளி, ஃப்ளூ மற்றும் கோவிட்-19 இவற்றை வேறுபடுத்திக் கண்டுபிடிப்பது கடினம். வெறுமனே மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு இவற்றைக் கொண்டு அவற்றை வேறுபடுத்தி அறிய இயலாது. காய்ச்சல், வறட்டு இருமல், காரணம் தெரியாத அசதி, மூச்சுவிடுதலில் சிரமம் போன்ற மற்ற அறிகுறிகள் இருந்தால் மட்டுமே வேறுபாட்டைக் காண இயலும்.

மூச்சிரைப்பு இருந்தால் கோவிட்-19 பாதிப்பாக இருக்கக்கூடும். ஏனென்றால் சாதாரண சளி மற்றும் ஃப்ளூ பாதிப்புக்கு மூச்சிரைப்பு இருக்காது. மூக்கடைப்பும், மூக்கு ஒழுகுதலும் கோவிட்-19 பாதிப்புக்கான பொதுவான அறிகுறிகள் பட்டியலில் இல்லை.

என்ன செய்யலாம்?

கொரோனா வைரஸ் இன்னும் பரவிக் கொண்டே இருக்கிறபடியால் எந்த அறிகுறியையும் அலட்சியம் செய்யாமல் இருப்பது நல்லது. வெறுமனே மூக்கு ஒழுகுதலும் மூக்கடைப்பும் இருந்தாலும் மற்றவர்களிடம் பழகாமல் தனிமையில் இருப்பது நல்லது. ஏனெனில், சிறிதளவு தொற்று இருப்பினும் அதன் மூலம் உடலில் எதிர்ப்பு ஆற்றல் இல்லாதவர்களுக்குப் பரவினால் அவர்கள் உயிருக்கு ஆபத்தைக் கொண்டு வரும் அபாயம் உள்ளது. ஆகவே, சாதாரண சளி மற்றும் ஃப்ளூ இவற்றுக்கான அறிகுறிகள் இருந்தாலே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் நலம்.

கொரோனா, சுவாச மண்டலம் சார்ந்த பாதிப்பாகவே முதலில் கருதப்பட்டது. ஆனால், அது தலை முதல் பாதம் வரையுள்ள உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. ஆகவே, தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் நோய் பரவாமல் எச்சரிக்கையாக இருப்பதே நலம்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Health News

அதிகம் படித்தவை