தூக்கக் கலக்கம், மனக்கலக்கம், குழப்பம், கவலை - இவை அனைத்தையுமே விரட்டும் பானம் உண்டென்றால் அது டீ எனப்படும் தேநீர்தான். களைப்பாகவோ, சோம்பலாகவோ உணரும் நேரங்களில் புத்துணர்ச்சியை அளிக்கும் பானம் தேநீர். சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் இருவகை தேநீரைப் பற்றியே உடல் தகுதியை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பேசுகின்றனர். அவை பிளாக் டீ மற்றும் கிரீன் டீ என்பவையாகும். இரண்டுக்குமே கமெல்லியா ஸினென்ஸிஸ் என்ற தாவரத்திலிருந்து கிடைக்கும் இலையே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பிளாக் டீயை விட கிரீன் டீ ஆரோக்கியமானதா?
கிரீன் டீ
கிரீன் டீ தயாரிப்பில் பறிக்கப்பட்ட இலைகள் சேகரிக்கப்பட்டு, உலர்த்தப்படுகிறது. அதன் பிறகு தட்டில் போடப்பட்டு சூடாக்கப்படுகிறது அல்லது ஆவியில் உலர்த்தப்படுகிறது. இம்முறைகள் மூலம் இலையில் ஆக்ஸிஜன் சேருவது தடுக்கப்பட்டு இலையின் நிறமும் சுவையும் தக்கவைக்கப்படுகிறது.
பிளாக் டீ
பிளாக் டீ தயாரிக்க தேயிலையானது பறிக்கப்பட்டபின், உலர்த்தப்பட்டு, அரைக்கப்படுகிறது. பல்வேறு வழிமுறைகளால் ஆக்ஸிஜனேற்றம் அடைகிறது. இலையிலுள்ள நொதிகள் (என்சைம்) ஆக்ஸிஜனேற்றத்தால் கறுப்பு மற்றும் பழுப்பு நிறம் கிடைக்கிறது. நறுமணம் கூடுகிறது. கிரீன் டீ முற்றிலும் இயற்கையானது. பிளாக் டீ நொதித்தலும் ஆக்ஸிஜனேற்றமும் அடைந்ததாகும்.
கிரீன் டீயின் நன்மைகள்
கிரீன் டீயில் EGCG என்ற ஆன்ட்டிஆக்ஸிடெண்ட் உள்ளது. இது இருதய நோய்களை எதிர்த்து செயலாற்றக்கூடியது. கிரீன் டீ உடலிலுள்ள நச்சுத்தன்மையை அகற்றி, சருமத்திற்கு பளபளப்பை அளிக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை கிரீன் டீ ஊக்குவிப்பதோடு உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. பிளாக் டீயை விட கிரீன் டீயில் அமிலத்தன்மை குறைகிறது. ஒரு கப் காஃபியில் உள்ள காஃபைனின் அளவில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே கிரீன் டீயில் உள்ளது.
பிளாக் டீயின் நன்மைகள்
பிளாக் டீயில் எல் தியானைன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது நாம் செய்பவற்றில் கவனம் செலுத்த உதவுவதோடு இளைப்பாறுதலையும் அளிக்கிறது. மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்களை குறைக்கிறது. பிளாக் டீயில் அமிலத்தன்மை அதிகம். இது இருதயத்தின் ஆரோக்கியத்தை காக்கிறது. இருதயம் மற்றும் இரத்தநாளங்களை பாதுகாக்கும் தியாஃப்ளேவின் என்ற பிளாக் டீ யில் உள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் கொலஸ்ட்ராலின் அளவை தியாஃப்ளேவின் கட்டுப்படுத்துகிறது. ஒரு கப் காஃபியில் உள்ள காஃபைனின் அளவில் மூன்றில் ஒரு பங்கு பிளாக் டீயில் உள்ளது. காஃபைனின் அளவை பொறுத்து எந்த டீ தேவையோ அதை பருகலாம்.