குளிர்காலத்தில் மூட்டுவலி அதிகரிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

by SAM ASIR, Nov 20, 2020, 19:01 PM IST

மழை பெய்து பூமி குளிர்ந்தால் சிலருக்கு 'அப்பா... வெயில் இல்லை' என்ற நிம்மதி வரும். ஆனால், பலருக்குக் குளிர்காலம் பல்வேறு தொல்லைகளைக் கொடுக்கும். அதிலும் மூட்டு வலி உள்ளவர்களுக்கு, எலும்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களுக்குக் குளிர்காலம் மிகவும் சிரமமானதாக அமைந்துவிடும். குளிர்காலத்தில் மூட்டுகளில் வலி அதிகரிக்கும்; மூட்டுகள் மடக்க இயலாமல் விறைத்ததுபோன்ற உணர்வு ஏற்படும்.

வெப்பநிலை குறையும்போது வலி அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. வெப்பநிலை குறையும்போது வளிமண்டல அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் நம் மூட்டுகளிலும் அழுத்தம் ஏற்படுகிறது. ஏற்கனவே மூட்டுகளில் குறைபாடு இருக்கும் நிலையில் காற்றின் அழுத்தம் அதிகரிக்கும்போது வலி அதிகமாகிறது.

சுற்றுப்புறத்தில் வெப்பநிலை குறையும்போது மூட்டுகளின் உள்ளே உள்ள உயவுக்கான திரவத்தின் அடர்த்தி அதிகரிக்கிறது. அதன் காரணமாகவே மூட்டுகள் விறைத்ததுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. குளிர் காலத்தில் நம் உடலிலுள்ள வலி ஏற்பிகள் உணர்ச்சி மிகுந்தவையாகின்றன. அதன் காரணமாக அதிக வலியை உணருகிறோம்.

குளிர் காலத்தில் எலும்புகளை ஆரோக்கியமாகக் காத்துக்கொள்வதற்கு சில ஆலோசனைகள்:

எப்போதும் உடல்ரீதியான செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உடற்பயிற்சியைத் தவற விடவேண்டாம். இதன் காரணமாக உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, வெதுவெதுப்பு கூடும். மூட்டுகளில் விறைப்பு உணர்வைக் குறைக்கும்வண்ணம் எலும்பு மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை இது மேம்படுத்தும்.

மூட்டுகளுக்கு அதிக பளு மற்றும் சிரமத்தைக் கொடுக்காத உடற்பயிற்சிகளைச் செய்யலாம். கை, கால்களை நீட்டிச் செய்யும் பயிற்சியால் வலி, வேதனை ஆகியவை குறையும். நீச்சல் போன்ற சில பயிற்சிகள் மூட்டுகளில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கும்.

வயதுக்கு ஏற்ற வண்ணம் போதுமான சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) மற்றும் வைட்டமின் டி சத்துகள் நிறைந்த ஆரோக்கியமான உணவுப்பொருள்களைச் சாப்பிடவேண்டும். பால் பொருள்கள், அல்மாண்ட், சோயா ஆகியவற்றில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) அதிகம் உள்ளது. முட்டை, தானியங்கள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடவேண்டும்.

மூட்டுகள் மற்றும் எலும்பு பிரச்சனை உள்ளவர்கள், பல அடுக்குகள் கொண்ட ஆடைகளை அணியலாம். குளிர் கால நிலையில் உடலை வெதுவெதுப்பாக வைக்க இது உதவும். அதன் காரணமாகத் தசைகளுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். வலி இருக்கும் மூட்டுகள் மற்றும் தசைகளில் வெப்ப ஒத்தடம் (heat pad) தரலாம்.

பொதுவாகவே குளிர் சூழ்நிலை உற்சாகத்தைக் குறைக்கும்; மனதில் சோர்வு தரக்கூடும். ஆகவே மனதை எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொள்ளக்கூடிய செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்.

மூட்டுவலி, முடக்குவாதம் என்ற ரூமெட்டாய்டு ஆர்த்ரைடிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்குக் குளிர்காலத்தில் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால் அதைக் கட்டுப்பாட்டில் வைக்குமளவுக்குச் சரியான மருந்துகளைத் தவறாமல் எடுக்கவேண்டும்.

More Health News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை