இருதய ஆரோக்கியத்திற்கு கூலிங் எஃபெக்ட் உள்ள காய்கறியை சாப்பிடுங்க!

by SAM ASIR, Jan 7, 2021, 15:32 PM IST

வெள்ளரிக்காய் எளிதாகக் கிடைக்கக்கூடியது. பெரும்பாலும் இதை சாலட்டாக சாப்பிடுகிறோம். உணவு உண்ணும் முன்பு சில வெள்ளரி துண்டுகளைக் கடித்துக்கொள்வது வழக்கமாகி வருகிறது. உடல் எடை குறைதல், இருதய ஆரோக்கியம், வலிகளை ஆற்றுவது உள்ளிட்ட பல்வேறு திறன்கள் வெள்ளரிக்கு உள்ளது. தினமும் வெள்ளரிக்காயை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

வெள்ளிரிக்காயின் சில முக்கியமான பயன்கள்:
நீர்ச்சத்து
நம் உடல் சரியானபடி செயல்படுவதற்கு நீர்ச்சத்து ('Hydration') அவசியம். ஒரு நாளைக்கு 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் அல்லது பிற பானங்களைப் பருகவேண்டும். உடலின் நீர்த்தேவையை சரியானபடி பூர்த்தி செய்யக்கூடியது வெள்ளரியாகும். வெள்ளரிக்காயில் 96 விழுக்காடு நீரால் ஆனது. நாம் சாப்பிடும் பழங்கள், காய்கறிகள் மூலம் போதுமான நீர் கிடைத்தால்தான் உடலின் செல்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்குவதால் வெள்ளரிக்காய் முக்கியமானதாகிறது.

உடல் எடை குறைப்பு

உடல் எடையைக் குறைக்கும் அவசியம் மற்றும் விருப்பமுள்ளோருக்கு மிகவும் ஏற்றது வெள்ளரிக்காய். எளிதாக உடல் எடையைக் குறைப்பதற்கு வெள்ளரிக்காய் உதவுகிறது. வெள்ளரித்துண்டுகள் வயிற்றை எளிதாக நிரப்புவதோடு நின்றுவிடுபவையல்ல. அவற்றில் அதிகமான நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்துள்ளது. எரிசக்தி (கலோரி) குறைந்த சிறந்த உணவு வெள்ளரியாகும். அதிகப்படியான கொழுப்பை உடலை விட்டு அகற்றக்கூடிய சில சத்துகளும் வெள்ளரியில் அடங்கியுள்ளன. வெள்ளரிக்காயில் கொழுப்பு சுத்தமாக கிடையாது. புரதம் 2 கிராம், கார்போஹைடிரேடு 11 கிராம், வைட்டமின் கே 62 விழுக்காடு என்ற அளவில் உள்ளன. வெள்ளரிக்காயை சரியான விதத்தில் சாப்பிட்டால் ஒரே வாரத்தில் 5 கிலோ உடல் எடையை குறைக்கலாம்.

கூலிங் எஃபெக்ட்

மூட்டுவலி மற்றும் தசை வலியால் அவதிப்படுவோருக்கு மிகவும் ஏற்றது வெள்ளரித்துண்டுகள். வெள்ளரித்துண்டுகள் சரும நலன் காப்பவை. இவை தசைகளுக்கும் எலும்புகளுக்கும் வலுவூட்டுகின்றன. முடக்குவாதம் தொடர்பான வலிகளை வெள்ளரி குறைக்கிறது என்று சிலர் கருதுகின்றனர். வெள்ளரியின் குளிரான தன்மை (கூலிங் எஃபெக்ட்) உடலில் ஏற்படும் அழற்சிகளைத் தடுக்கிறது. நல்ல நொதிகளை (என்சைம்) சுரக்கச் செய்து வலிகளைக் குறைக்கிறது. முதுமையைத் தொட இருப்பவர்கள் கண்டிப்பாக வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிடுவது நல்லது.

ஈறுகளுக்கு நன்மை

வெள்ளரித்துண்டுகளை கடித்துச் சாப்பிடுவது நம் பற்களுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது. இது வாயின் அமிலத்தன்மையைச் சமச்சீராகப் பாதுகாக்கிறது. pH அளவை பராமரிக்கிறது. ஈறு வியாதிகள் மற்றும் பல்வலி ஏற்படாமல் இது தடுக்கிறது. வெள்ளரி, காரட் போன்றவற்றைக் கடித்துச் சாப்பிடுவதால் பற்கள் சுத்தமாகின்றன; காரைகள் மற்றும் நச்சுப்படிவுகள் அகற்றப்படுகின்றன.திசுக்களுக்கும் இரத்த ஓட்டத்திற்கும் உதவுகிறது.

வெள்ளரியில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் என்னும் ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் உள்ளன. இவை இரத்த ஓட்டத்தைச் சீராகப் பாதுகாக்கின்றன. நிலையற்ற அணுக்கள் (ஃப்ரீ ராடிகல்ஸ்) உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை. இவற்றிக்கு எதிராக வெள்ளரிக்காய் செயல்படுகிறது. சேதமடைந்த திசுக்களை மறுபடியும் உற்பத்தி செய்ய இது உதவுகிறது. நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும் ஃப்ளவனாய்டுகள் மற்றும் டானின்கள் இதில் உள்ளன.

மலச்சிக்கல்

வெள்ளரியில் அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதால் ஜீரணம் நன்றாக நடந்து மலம் வெளியேற உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்தும் உடலிலிருந்து கழிவு வெளியேற உதவுகிறது. உடலில் தங்கியிருக்கும் கிருமிகள், நச்சுப்பொருள்களை வெள்ளரி முழுமையாக வெளியேற்றுகிறது. உடலில் அதிகப்படியான நீர் தங்குதல், உப்பிசம் மற்றும் வயிறு தொடர்பான தொல்லைகளை அகற்றும் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய தாதுகள் வெள்ளரியில் உள்ளன.

கொலஸ்ட்ராலை குறைக்கிறது

வெள்ளரியில் இயற்கையாகக் கரையக்கூடிய நார்ப்பொருளான பெக்டின் உள்ளது. இது இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது. இதன் காரணமாக இருதயம் ஆரோக்கியம் பெறுகிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருந்தால் செல்களை சேதப்படுத்தக்கூடிய ஆர்ஓசி (ROC) மற்றும் ஆர்ஓஎஸ் (ROS) ஆகியவை உருவாகும். இவற்றின் அளவை வெள்ளரி ஒழுங்குபடுத்தி, சர்க்கரையின் அளவை சீராக்குகிறது.

You'r reading இருதய ஆரோக்கியத்திற்கு கூலிங் எஃபெக்ட் உள்ள காய்கறியை சாப்பிடுங்க! Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை