வாழைப்பழம் சாப்பிடுவதை சிலர் கௌரவ குறைவாக எண்ணலாம்; ஆனால், பலர் அது உடல் எடையை அதிகரிக்கச் செய்துவிடும் என்று அஞ்சுகின்றனர். வாழைப்பழம் உடற்பயிற்சி செய்து முடித்தபின்னர் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்றதாகும். வாழைப்பழத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான வைட்டமின்கள், தாது உப்புகள் அடங்கியுள்ளன. வாழைப்பழத்தில் அதிகமான கார்போஹைட்ரேட்டுகளும் அதிக அளவு எரிசக்தியும் (கலோரி) உள்ளதால், உடல் எடையை பராமரிக்க விரும்புகிறவர்கள் அதை சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். சாதாரணமாக ஒரு வாழைப்பழத்தில் 105 கலோரியும் 27 கிராம் கார்போஹைட்ரேட்டும் உள்ளது. இதில் புரதச் சத்து மிகவும் குறைவாகும். இந்தக் காரணங்களுக்காக வாழைப்பழம் சாப்பிடுவதை நீங்கள் தவிர்த்தால், வேறு பல நன்மைகளை இழக்கக்கூடும். உடல் எடை பராமரிப்பில் கவனமாயிருப்பவர்கள், ஒரு நாளைக்கும் ஐந்து அங்குல அளவுள்ள வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடிய சில உணவு பொருள்கள் உள்ளன.
காலை உணவுடன் வாழைப்பழம்
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒருபோது காலை உணவை தவிர்க்கவேண்டாம். இரவு உணவுக்குப் பின் 10 முதல் 12 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருப்பதால், காலை உணவு முக்கியமாகும். அதன் மூலமாகவே உடல் ஆற்றல் பெற வேண்டும். புரதம், நார்ச்சத்து மற்ற ஊட்டசத்துகள் அடங்கிய உணவை காலையில் சாப்பிடுவது நாளின் பிற்பகுதியில் அதிக கலோரி அடங்கிய உணவை சாப்பிடுவதை தவிர்க்கும். வாழைப்பழத்தில் அதிக ஸ்டார்ச் மற்றும் பொட்டாசியம் உள்ளது. அது வயிறு நிறைந்த திருப்தியையும் உடலுக்கு பெலனையும் அளிக்கும். ஓட்மீல், சியா விதைகள் இவற்றுடன் வாழைப்பழத்தை சேர்த்து காலையில் சாப்பிடலாம்.
பீநட் பட்டருடன் வாழைப்பழம்
உடற்பயிற்சிக்கு முன்னர் மற்றும் பின்னர் சாப்பிடக்கூடியது வாழைப்பழம் என்பதை பல வல்லுநர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். உடனடியாக உடலுக்கு ஆற்றலை அளிக்கக்கூடிய குளூக்கோஸ் இதில் உள்ளது. உடற்பயிற்சிக்கு பின்னர் ஏற்படக்கூடிய தசைப் பிடிப்பு மற்றும் தலைசுற்றலை வாழைப்பழத்திலுள்ள பொட்டாசியம் தடுக்கிறது. ஆனால் தசையை கட்டமைக்கக்கூடிய புரதம் என்னும் பெரு ஊட்டச்சத்து வாழைப்பழத்தில் குறைவு. புரதத்தை சேர்த்துக்கொள்ள வேர்க்கடலை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு போன்ற 'நட்ஸ்' வகைகள் மற்றும் அவற்றின் பட்டருடன் சேர்த்து வாழைப்பழத்தை சாப்பிடலாம்.
வாழைக்காய் ஸ்மூத்தி
வாழைப்பழத்தை விட, வாழைக்காயில் ஸ்டார்ச் அதிகம். இந்த ஸ்டார்ச் வளர்சிதை மாற்றத்தை தூண்டக்கூடியது. ஊட்டச்த்துகள் நம் உடல் செல்களில் சேருவதற்கு பொட்டாசியம் உதவுகிறது. ஆனால் வாழைக்காய் சற்றே கசப்பு சுவை கொண்டது. ஆகவே, சிறிது தேன் மற்றும் நட்ஸ் சேர்த்து வாழைக்காய் ஸ்மூத்தியாக பருகலாம்.