'கிரியாட்டின்' என்ற சொல்லை நாம் இப்போது அடிக்கடி கேள்விப்படுகிறோம். சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தோடு மிகவும் தொடர்புடைய இந்தச் சொல். கிரியாட்டின் என்ற பொருள் நம் இரத்தத்தில் குறிப்பிட்ட அளவுக்குள் இல்லையென்றால் அது நம் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதன் அறிகுறியாக கருதப்படுகிறது. பல்வேறு மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும் சிகிச்சை அளவுக்குச் செல்வதற்கு முன்னே சில கட்டுப்பாடுகளை நாம் கடைபிடிப்பதன் மூலம் கிரியாட்டின் அளவு கூடிவிடாமல் பராமரிக்க முடியும். நம் உடலின் தசைகளின் இயக்கத்தில் உபரி பொருளாக கிரியாட்டினைன் என்ற வேதிப்பொருள் உருவாகிறது. இது ஒரு வேதிக்கழிவு (கெமிக்கல் வேஸ்ட்) ஆகும். நம் உடலில் காணப்படும் கிரியாட்டினைன், கிரியாட்டின் என்ற இயற்கை வேதிப்பொருளாக உள்ளது. பெருமளவு கிரியாட்டினைன் இரத்த ஓட்டத்தில் வெளியிடப்பட்டு பின்னர் சிறுநீரகங்கள் மூலம் வடிகட்டப்படுகிற்து; சிறுநீர் மூலம் வெளியேறுகிறது. சில நேரங்களில் கிரியாட்டினைனின் அளவு உடலில் அதிகமாகி, உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. கிரியாட்டினைன் அளவு அதிகமானால் சிறுநீரக செயல்பாடு சரியாக இருக்காது.
கிரியாட்டினைன் அளவு
நம் உடலிலுள்ள கிரியாட்டினைனை சரியான அளவில் பராமரிக்க சிறுநீரகங்கள் உதவுகின்றன. ஒருவரது வயது, பாலினம், உடல் அளவு ஆகியவற்றை பொறுத்து கிரியாட்டினைன் அளவும் மாறக்கூடும். ஆண்களுக்கு 0.6 முதல் 1.2 mg/dL அளவும், பெண்களுக்கு 0.5 முதல் 1.1 mg/dL அளவும், பதின்ம வயதினருக்கு 0.5 முதல் 1.0 mg/dL அளவும், குழந்தைகளுக்கு 0.3 முதல் 0.7 mg/dL அளவும் கிரியாட்டினைன் இருக்கவேண்டும். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், குறைந்த நோய் எதிர்ப்பு ஆற்றல், பாக்டீரியா தொற்று ஆகியவை இருப்போர் கிரியாட்டினைன் அளவை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். கிரியாட்டினைன் அளவு சற்று அதிகமாக இருப்போர் சில கட்டுப்பாடுகளை கைக்கொண்டால் அதை குறைக்கலாம்.
புரதம்
நம் உடலுக்குத் தேவையான மிக முக்கியமான சத்து புரதம் ஆகும். ஆனால், புரதத்தின் (புரோட்டீன்) அளவு அதிகரித்தால் கிரியாட்டினைன் கூடும் வாய்ப்பு உள்ளது. புரதம் அதிகமான சில உணவுகள் கிரியாட்டினைன் அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆடு, மாடு இவற்றின் இறைச்சி, சில பால் பொருள்கள் ஆகியவற்றை தவிர்த்து, தாவர உணவுகளை சாப்பிட்டால் புரதத்தின் காரணமாக கிரியாட்டினைன் உயர்வதை தடுக்கலாம்.
நார்ச்சத்து
செரிமானத்திற்கு உதவக்கூடியது நார்ச்சத்து. இது நம் உடலில் கிரியாட்டினைன் சரியான அளவில் பராமரிக்கப்படவும் உதவுகிறது. அதிக அளவு நார்ச்சத்து உணவுகளை சாப்பிட்டால் கிரியாட்டினைன் அளவு குறையும். பழங்கள், காய்கறிகள், பயிறுகள், பருப்பு மற்றும் முழு தானியங்கள் இவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
நீர்ச்சத்து
உடலில் போதுமான அளவு நீர் இல்லையென்றால், கிரியாட்டினைன் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படியே நீர் அருந்தமுடியும். மற்றவர்கள் நாளுக்கு 8 முதல் 10 தம்ளர் நீராவது அருந்தவேண்டும்.
உப்பு
நம் உணவில் அதிக அளவு உப்பு சேர்ப்பது இரத்த அழுத்தம் அதிகரிக்கக் காரணமாகும். இரத்த அழுத்தம் அதிகரித்தால், சிறுநீரக பிரச்னையை கொண்டு வரும். பதப்படுத்தப்பட்ட பொருள்களில் உப்பு, சோடியம் அதிகம் இருப்பதால் அவற்றை தவிர்க்கவேண்டும். உணவுக்கு சுவையூட்ட உப்பை தவிர வேறு இயற்கை பொருள்களை பயன்படுத்தலாம். ஒருநாளைக்கு 2 மேசைக்கரண்டி அளவுக்கு மேல் உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும்.
சிட்டோசன்
உடல் எடை குறைக்க விரும்புவோர், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த விரும்புவோர் சாப்பிடும் துணை உணவு சிட்டோசன் ஆகும். இது உடலில் கிரியாட்டினைன் அளவையும் குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. புகை பிடித்தலை தவிர்ப்பது, மது அருந்தாமல் இருப்பது, இவற்றுடன் உடற்பயிற்சிகளுக்காக புரத உணவுகள், கிரியாட்டின் துணை உணவுகள் இவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பதும் கிரியாட்டினைன் அளவை சீராக பராமரிக்க உதவும்.