இது செட்டிநாடு ஸ்பெஷல் பொடி கத்திரிக்காய் வறுவல் ரெசிபி !

Chettinad Special podi brinjal fry recipe

by Isaivaani, Nov 26, 2018, 20:17 PM IST

உணவுப் பிரியர்களே.. இன்னைக்கு செட்டிநாடு ஸ்பெஷல் உணவு வகைகளில் பொடி கத்திரிக்காய் வறுவல் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

சின்ன கத்திரிக்காய் - 8
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
பொடி மசாலாவிற்கு...
கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
எள் - 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 7
மிளகு - 1/2 டீஸ்பூன்
புளி - சிறிய துண்டு
தேங்காய் - 1/4 கப்
வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து, அவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் கத்திரிக்காயை நீரில் கழுவி, மேல் உள்ள காம்பை முற்றிலும் நீக்காமல், பாதியாக வெட்டிவிட்டு, பின் பூமொட்டு விரிவது போன்று 4-6 ஆக கீறிக் கொள்ள வேண்டும்.

அதில் பொடித்து வைத்துள்ள பொடியை கத்திரிக்காயின் உள்ளே தூவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதில் கத்திரிக்காய்களைப் போட்டு, மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும்.

பின் அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

கத்திரிக்காயானது நன்கு வெந்ததும், அதில் மீதமுள்ள பொடி மசாலாவைத் தூவி கிளறி, சற்று மொறுமொறுவென்று வந்த பின், அதனை இறக்கினால், செட்டிநாடு பொடி கத்திரிக்காய் வறுவல் ரெடி !

You'r reading இது செட்டிநாடு ஸ்பெஷல் பொடி கத்திரிக்காய் வறுவல் ரெசிபி ! Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை