திருவள்ளூர் மாவட்டத்தில் ஐந்து மாதங்களுக்கு முன் காணாமல் போன சிறுமி எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள புது வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகள் சரிதா. அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்துவந்த சரிதா கடந்த செப்டம்பர் மாதம் காலை 9 மணியளவில் பள்ளிக்குச் சென்றார். அதன்பிறகு இந்த உலகம் அவரை பார்க்கவில்லை. எல்லா நாட்களையும் போல அன்று காலை பள்ளிக்குச் சென்றவர் தான் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் பதறியடித்த பெற்றோர்கள் ஊர் முழுக்கத் தேடியுள்ளனர். பல இடங்களில் தேடியும் சரிதா கிடைக்கவில்லை. பின்னர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் துணையுடன் சரிதாவை தேடியுள்ளார் சுப்பிரமணி. அப்படி இருந்தும் கிடைக்கவில்லை. இதனால் இரண்டு நாட்கள் கழித்து மகளை காணவில்லை என்று பொதட்டூர் பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
முதலில் சரிதாவை போலீசார் தேடியுள்ளனர். ஆனால் சில நாட்கள் கழித்து போலீசார் சரிதாவை கண்டுபிடிப்பதில் அக்கறை காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் புகாரை கிடப்பில் போட்டதாகவும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பள்ளிப்பட்டு அருகே உள்ள கீச்சலம் என்ற கிராமத்தில் தனது தோட்டத்தின் அருகே உள்ள ஏரிக்கரையில் மாணவி சீருடை தனியாகவும், எலும்புக்கூடுகள் தனியாகவும், முடி, உள்ளிட்ட பொருட்கள் இருப்பதை பார்த்துள்ளார். அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர் உடனடியாக போலீசாரை அணுகியுள்ளார்.
போலீசார் வந்து பார்த்ததில் அங்கிருந்த உடை காணாமல் போன மாணவி சரிதாவின் உடை என்பதை உறுதி செய்தனர். இருப்பினும் கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடுகள் மாணவியின் எலும்புகளாக எனத் தெரியவில்லை. இதனால் எலும்புகளை கைப்பற்றிய போலீசார் அதனை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மாணவி நிர்வாணமாக புதைக்கப்பட்டிருந்தால் அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற ரீதியில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். தனிப்படை அமைத்து குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.