பண மோசடி வழக்கில் தமிழ் இயக்குனர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு சாட்டை யுவன் மற்றும் பசங்க ஸ்ரீராம் நடிப்பில் வெளியான படம் கமர்கட்டு. இந்தப் படத்தை ராம்கி ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கியிருந்தார். இதற்கிடையே, இதே ராம்கி ராமகிருஷ்ணன் நர்த்தகி என்ற படத்தை இயக்கிய விஜயபத்மா மற்றும் அவரது கணவர் முத்துகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து படத் தயாரிப்பில் இறங்கினார். அதன்படி, ‘இதயம் திரையரங்கம்’ என்ற படத்தை தயாரிக்கும் பணியில் இறங்கினார். இந்தப் படத்தை தயாரிப்பதற்காக சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த அசோக் என்ற பைனான்சியரிடம் 40 லட்சம் வரைக்கும் கடன் பெற்றுள்ளார். கடனுக்கு ஈடாக பத்திரம் ஒன்றையும் கொடுத்துள்ளார் ராமகிருஷ்ணன்.
ஆனால் சொன்ன தேதியில் பணத்தை திருப்பி தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ராமகிருஷ்ணன் மீது பைனான்சியர் அசோக் வழக்குப் பதிந்துள்ளார். இந்த வழக்கில் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மூவரும் தலைமறைவானதால் கைதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் அவர்கள் இருக்கும் இடம் தெரிந்து போலீஸார் கைது செய்தனர். தற்போது மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பண மோசடி வழக்கில் இயக்குநர் ஒருவர் கைதாகியுள்ளது தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.