மதுரையின் பிரசித்தி பெற்ற வைகை நதி விரைவில் லண்டனில் உள்ள தேம்ஸ் நதியைப் போல மாறும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.மதுரையில் அதிமுகவின் மேற்கு மாநகர் மாவட்டம் இளைஞர் மற்றும் பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இந்த நிகழ்வுக்குத் தலைமை வகித்துப் பேசிய தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு,” அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்கள் பாஸ் என்ற துணிச்சலா ன முடிவை எடுத்த நம் முதல்வர். மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக பத்தாம் வகுப்பில் கூட அனைவரும் பாஸ் என்று அறிவித்தவர்.
இந்த அதிமுக ஆட்சி மதுரையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. மதுரை மாநகரில் வெகு விரைவில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தைச் சத்தமில்லாமல் அதிமுக அரசு செய்து வருகிறது. மதுரையின் சிறப்புகளில் ஒன்றான வைகை நதி விரைவில் லண்டன் தேம்ஸ் நதியைப் போல் மாற உள்ளது. எதிர்காலத்தில் மதுரையில் போக்குவரத்து நெரிசல் என்பதே இருக்காது.
அப்துல் கலாம் சொன்னது போல் எல்லோரும் கனவு காணுங்கள். அதிமுகவில் முதல்வராக வேண்டும் என அனைவரும் கனவு காணுங்கள் . அதிமுக ஆட்சியில் எல்லோரும் முதல்வராக வாய்ப்பு இருக்கிறது என்றார். வைகை அணையில் தண்ணீர் ஆவியாகிவிடாமல் இருக்க தெர்மாகோல் அட்டைகளைப் போட்டது போல வைகை நதியை தேம்ஸ் நதியாக மாற்ற அமைச்சர் என்ன ஐடியா வைத்திருக்காரோ தெரியவில்லை.