மதுரையைச் சேர்ந்த பாண்டிய ராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போதை தடுப்பு நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக சீதாராமன் என்பவர் பணியாற்றி வருகிறார்.அவர் குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் செய்து வருகிறார்.
ஏற்கெனவே உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் போது அவரை அழைத்து எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறார். இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை மட்டுமல்ல குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது .
இதன்மூலம் மக்களிடம் நீதிமன்றம் மற்றும் சட்டத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. ஆகவே அரசு சிறப்பு வழக்கறிஞராக சீதாராமன் செயல்பட இடைக்காலத் தடை விதித்தும், அவரை பதவியில் இருந்து நீக்கி இந்த பதவிக்கு நேர்மையான ஒருவரை நியமிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கியை அமர்வு, மதுரை மாவட்ட போதை தடுப்பு நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக சீதாராமன் செயல்பட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.மேலும் வழக்கறிஞர் சீதாராமன் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.