முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொகுதி எம்எல்ஏவுக்குத் தெரியாமல் தொகுதிக்குள் எப்படி வரலாம்? அதுவும் ஜெயலலிதாவால் கட்சியை விட்டே நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்கலாமா? என்று கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலகக் குரல் எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா முதல்வராக 2011-16-ல் இருந்த போது வேளாண் அமைச்சராக இருந்தவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி . நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சிக்கியதால் அமைச்சர் பதவியைப் பறித்து கட்சியை விட்டே நீக்கினார்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமண வரவேற்பு விழா இன்று மாலை கலசப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கும் தற்போதைய கலசப்பாக்கம் அதிமுக எம்எல்ஏ பன்னீர் செல்வத்துக்கும் ஏழாம் பொருத்தம் என்று கூறப்படும் நிலையில், அதெப்படி எனக்குத் தெரியாமல் இபிஎஸ், ஓபிஎஸ் என் தொகுதிக்குள் வரலாம் என்று போர்க்கொடி தூக்கியுள்ளார். அதுவும் அம்மாவால் கட்சியை விட்டே நீக்கப்பட்ட, குற்ற வழக்கில் சிறைக்குச் சென்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதா? என்று கூறி பன்னீர் செல்வம் கலகக் குரல் எழுப்பியுள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.