பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுடன் அணி அமைத்ததை திமுகவில் உள்ள சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடந்த சில வாரங்களாக ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன் ரொம்பவே நெருக்கம் காட்டி வந்தார் அன்புமணி. ' உங்கள் கூட்டணியில் இருப்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். தொகுதிப் பங்கீட்டில் எங்களுக்கு உரியதை ஒதுக்கினால் போதும்' என கோடிட்டிக் காட்டியிருக்கிறார் அன்புமணி.
இதுதொடர்பாக, சென்னை அண்ணாசாலையில் உள்ள ரெயின் ட்ரீ ஓட்டலில் பலமுறை சந்திப்புகளும் நடந்தன. ஆனால் பாமகவின் முக்கிய டிமாண்டான வைட்டமின் சி கொடுக்கப்படுவதை ஸ்டாலின் விரும்பவில்லை. ' கூட்டணிக்குள் வரட்டும். அவர்களுக்கு செல்வாக்காக இருக்கும் தொகுதிகளை ஒதுக்குவோம். ஆனால் பண விஷயத்தில் உறுதி கொடுக்க முடியாது' என உறுதியாகக் கூறிவிட்டாராம். இதனால் கடும் கோபத்தில் இருந்திருக்கிறார் ராமதாஸ்.
இதைப் பற்றி நிர்வாகிகளிடம் பேசும்போது, நாம் கேட்பதைக் கொடுப்பதற்கு எடப்பாடி தயாராக இருக்கிறார். தொகுதி செலவுகளை முழுமையாக அவர் பார்த்துக் கொள்வார். தேர்தல் பிரசார வேலைகளை மட்டும் நாம் பார்த்தால் போதும். இன்னமும் ஸ்டாலினை நம்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை எனக் கூறியிருக்கிறார். இருப்பினும், திமுகவிடம் இருந்து வைட்டமின் சி குறித்து பாசிட்டிவ் சிக்னல் வரும் என நேற்று நள்ளிரவு வரை காத்திருந்தாராம் அன்புமணி. அப்படி எந்தத் தகவலும் வராததால், அதிமுக கூட்டணிக்கு ஓ.கே சொல்லிவிட்டார். அதனால்தான், பாமகவுக்கு மக்களைப் பற்றிக் கவலையில்லை. பணத்தைப் பற்றித்தான் கவலை என வெளிப்படையாக விமர்சனம் செய்தார் ஸ்டாலின் என்கிறார்கள் உள்விவகாரத்தை அறிந்தவர்கள்.