அதிமுக கூட்டணியில் பாமக சேர்ந்த நாளில் இருந்தே சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. ராமதாஸ் எழுதிய கழகங்களின் கதை உட்பட அவருடைய முந்தைய விமர்சனங்களை எல்லாம் பக்கம் பக்கமாகத் தொகுத்து வெளியிட்டு வருகின்றனர் பாமக எதிர்ப்பாளர்கள்.
கூட்டணி அமைத்தற்காக விமர்சனங்கள் கிளம்புவதைக் கவனித்த அன்புமணி, இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். நாங்கள் தனித்து நின்றபோது எங்கள் கட்சியில் இருந்து ஒரு எம்எல்ஏவைக் கூட மக்கள் தேர்வு செய்யவில்லை என்றவர், அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குறித்த கேள்வியின்போது தடுமாற்றத்துடன் பதில் அளித்தார் அன்புமணி.
மற்ற கட்சிகளைவிடவும் இந்தத் தேர்தலை மிக முக்கியமானதாகப் பார்க்கிறது பாமக. காடுவெட்டி குரு மறைவு தொடர்பாக வன்னியர் சங்கத்தில் எழுந்துள்ள எதிர்ப்பு.
கூட்டணி மாற்றத்தால் சொந்த சமூக எதிர்ப்பு, தலித் எதிர்ப்பு, பாஜக கூட்டணியால் சிறுபான்மையினரின் எதிர்ப்பு என வழக்கத்துக்கு மாறான சூழல் நிலவுகிறது.
இதில் காடுவெட்டி குரு குடும்பத்தை எதிர்த் தரப்பினர் கையில் எடுத்துள்ளதை அதிர்ச்சியோடு கவனிக்கிறார் ராமதாஸ். பாமக தரப்பில் வேட்பாளர்களை அறிவிக்கும்போது, எதிர்த் தரப்பில் அதற்குப் போட்டியாக வலுவான வேட்பாளரைக் களமிறக்கவும் குரு குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காகக் கடல் கடந்து சிலர் வேலை செய்து வருகின்றனர். ராமதாஸ் எதிர்ப்பு என்ற புள்ளியில் இவர்கள் அனைவரும் ஒன்று திரண்டுள்ளனர்.
குருவை மையமாக வைத்து வசூல் வேலைகளும் நடந்து வருகிறது. 7 தொகுதிகளிலும் பாமக மண்ணைக் கவ்வ வேண்டும் என்பதுதான் அவர்களின் முதல் வேலையாம்.
இதை வலியுறுத்தி புலம்பெயர் வன்னியர்களிடம் நிதி பெறும் வேலைகள் தொடங்கியுள்ளன. பாமகவில் இருந்து விலகிய முன்னாள் தலைவர்கள் எனப் பலரும் இந்தப் பணியில் வேகம் காட்டி வருகிறார்களாம்.
எழில் பிரதீபன்