பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட விமானி அபிநந்தன் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் கனத்த மவுனம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீரன் அபிநந்தன் பற்றி குறிப்பிட்டுப் பேசினார் பிரதமர் மோடி.
கன்னியாகுமரியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி மோடி பேசியதாவது:
தமிழகத்தைச் சேர்ந்த தீரமிக்க விங் கமாண்டர் அபிநந்தனை எண்ணி ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்கின்றனர். நாட்டின் முதலாவது பெண் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதிலும் பெருமை கொள்கிறேன்.
மேக் இன் இந்தியா திட்டத்துக்கு சிறந்த உதாரணமாக இன்று கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டிருக்கிற மதுரை- சென்னை இடையேயான அதிவேக தேஜஸ் சொகுசு ரயில்தான். சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில்தான் இந்த சொகுசு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.
அதேபோல ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையே புதிய ரயில் பாதை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 1964-ம் ஆண்டு புயலில் இந்த ரயில் பாதை சேதமடைந்தது.
ஆனால் இத்தனை ஆண்டுகாலமாக யாரும் அதை சரி செய்யாத நிலையில் அப்பாதைக்காக அடிக்கல் நாட்டியிருக்கிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.