மீனவர்கள் பாதுகாப்பில் மத்திய அரசு அக்கறையுடன் செயல்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி பேசியதாவது:
மீனவர்கள் பாதுகாப்பில் இந்திய அரசு மிகவும் அக்கறையோடு செயல்படுகிறது. 2014-ம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத்தின் விளைவுகளை இந்தியா பல ஆண்டுகளாக எதிர்கொண்டுதான் வருகிறது. 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு பல பயங்கரவாத தாக்குதல்கள் இந்தியாவில் நடைபெற்றன. இதற்கு மத்திய அரசு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்த்தும் நடைபெறவில்லை.
மும்பை தாக்குதலைத் தொடர்ந்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை பாயும் என எதிர்பார்த்தோம். அப்படி எதுவும் நடக்கவில்லை. அதே நேரத்திலும் ஊரியிலும் புல்மாவாவிலும் நடந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறோம் நாம். அந்த வீரர்களுக்கு நாம் வணக்கம் செலுத்துவோம்.
மும்பை தாக்குதலின் போதே சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப் போவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதை தடுத்துவிட்டது. தற்போது ராணுவத்துக்கு முழுமையான சுதந்திரத்தை நாம் அளித்திருக்கிறோம். இதுதான் புதிய இந்தியா.
அதே நேரத்தில் மோடி வெறுப்பாளர்களால் வழிநடத்தப்படும் கட்சியினர் இந்தியாவுக்கு எதிரான விஷம கருத்துகளை பரப்புகின்றனர். உலகமே இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கிறது. ஆனால் சில கட்சிகள் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை மீதுசந்தேகம் எழுப்புகின்றன. 2009-ம் ஆண்டு திமுகவும் காங்கிரஸும் அமைச்சர் பதவிக்காக எப்படி நடந்து கொண்டனர் என்பதை இந்தியா நினைவில்தான் வைத்துள்ளது.
என்னுடைய குடும்பம் என்பது 130 கோடி இந்தியர்கள். நான் அவர்களுக்காக வாழ்வேன்...அவர்களுக்காகவே சாவேன்.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.