திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எந்தச் சின்னத்தில் போட்டியிடும் என்ற சஸ்பென்ஸ் ஏற்பட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தியதா? என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் கையெடுத்து பெரிய கும்பிடு போட்டார் திருமாவளவன் .
தொகுதி உடன்பாடு குறித்த நீண்ட இழுபறிக்குப் பின் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளைப் பெற்றுவிட்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. மு.க.ஸ்டாலினுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் திருமாவளவன் தனியாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது உடன்பாடு பற்றி விவரித்த திருமாவளவனிடம் எந்தச் சின்னத்தில் விசிக போட்டியிடும் எனக் கேட்டதற்கு, இதுவரை விசிக தனிச் சின்னத்திலேயே போட்டியிட்டு வந்தது. இந்தத் தேர்தலில் கூட்டணி நலன் கருதி எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றார்.
உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதா? என்று செய்தியாளர்கள் கேள்வியை முடிக்கும் முன்பே கையெடுத்து பெரிய கும்பிடு போட்டு திருமாவளவன் நகர்ந்து விட்டார். இதனால் விசிக எந்தச் சின்னத்தில் போட்டியிடும் என்பது சஸ்பென்ஸாக உள்ளது