திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சி கேட்ட தொகுதிகள் ஒதுக்கப்படாததால் இழுபறி நீடிக்கிறது. நாளை 3-ம் கட்ட பேச்சு நடைபெறும் என மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் , மதிமுக கட்சிகளுடனான தொகுதி உடன்பாடு இன்று இறுதிக் கட்டத்தை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது அதன்படி இன்று காலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினருடன் பேச்சு நடத்தி 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடு முடிவானது.
தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், கு.ராமகிருஷ்ணன், சவுந்திரராஜன் ஆகியோர் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்க உடன்பாடு எட்டப்படவில்லை.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், முதல் கட்ட பேச்சுவார்த்தையில் எங்களுடைய எதிர்பார்ப்பை தெரிவித்தோம். இன்றைய 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக தரப்பில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை கூறியுள்ளனர். நாளை எங்கள் கட்சியின் செயற்குழுவில் விவாதித்து 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.