திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாட்டை இன்றைக்குள் முடித்துவிட திட்டமிடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் விறுவிறுப்பான பேச்சுவார்த்தையைத் தொடங்கியது திமுக தலைமை . முதலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடன் 2 தொகுதிகளுக்கு உடன்பாடு முடிவானது. ஆனால் சின்னம் விவகாரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதற்கான கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் பதிலேதும் சொல்லாமல் கும்பிடு போட்டுச் சென்று விட்டார்.
அடுத்து வந்த மார்க்சிஸ்ட் கட்சியினருடனான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட, நாளை முடிவை அறிவிப்பதாகக் கூறிச் சென்று விட்டனர். தொடர்ந்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 2 தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சி தெரிவித்து விட்டுச் சென்றனர்.
மாலை 4 மணிக்கு மதிமுகவை பேச்சுவார்த்தைக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்தது. திடீரென 3 மணிக்கே அறிவாலயம் வந்தார் வைகோ . அறிவாலயத்திற்குள் சென்ற சிறிது நிமிடங்களில் வெளியே வந்த வைகோ, திடீரென இன்று மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடப்பட்டது. எங்கள் கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருப்பதால் இன்று பேச்சு நடத்த வாய்ப்பில்லை. நாளை வருகிறோம் என்ற தகவலை சொல்லி விட்டுச் செல்வதற்காக வந்தேன் என்று கூலாக தெரிவித்து விட்டுச் சென்றார்.
இதன் பின் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் அறிவாலயம் வந்தார். ஒரு தொகுதியில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதித்து உடன்பாட்டில் கையெழுத்திட்டுச் சென்றார்.
இப்படியாக இன்றைய நாள் முழுவதும் அண்ணா அறிவாலயம் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் பரபரப்பாக காணப்பட்டது.