நாளை விருதுநகரில் திமுக சார்பில் தென் மண்டல மாநாடும், சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் பிரம்மாண்ட பொதுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. இன்றைக்குள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முடித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி விட திமுக, அதிமுக இரு கட்சிகளும் தீவிரமாகியுள்ளன.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுடனான உடன்பாடு மட்டுமே பாக்கியாக உள்ளது. விஜயகாந்தை சந்தித்த நிலையில் இன்று நடைபெறும் தேமுதிக அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவுடனான கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
திமுக கூட்டணியிலும் மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிகளுடன் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. இதனால் இன்றைக்குள் திமுக கூட்டணியிலும், அதிமுக கூட்டணியிலும் யார்? யார்? என்பதும் எந்தெந்தக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதும் இறுதி செய்யப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இன்று வரும் நிலையில் நாளை விருதுநகரில் நடைபெறும் திமுக மண்டல மாநாட்டில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி கூட்டணிப் பலத்தை நிரூபிக்க திமுக தரப்பும், சென்னை வண்டலூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கூட்டணியின் தலைவர்களை மேடையேற்றி கெத்துக்காட்ட அதிமுகவும் தீவிர முனைப்பில் உள்ளனர்.