திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டதற்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்சியிலிருந்து விலகி தினகரனின் அமமுகவில் இணையப் போவதாக நிர்வாகிகள் பலர் கலகக் குரல் எழுப்பியுள்ளனர்.
தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி விஷயத்தில் அதிரடி முடிவுகளை எடுத்து புயலைக் கிளப்பி வருபவர் மதிமுக- பொதுச் செயலாளர் வைகோ . கடந்த 2014 பொதுத் தேர்தலில் பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் மூன்றாவது அணியில் ஐக்கியமாகி களம் கண்டார். கடந்த 2016-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒன்றிணைத்து மக்கள் நலக் கூட்டணி அமைத்தார். அந்தக் கூட்டணி பெரும் தோல்வியைத் தழுவியது.
இந்த முறை ஆரம்பம் முதலே திமுகவுடன் தான் கூட்டணி என்பதில் திட்டவட்டமாக இருந்தார்.மு.க.ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என்பதிலும் பிடிவாதமாக உள்ளார். தமிழகம் முழுவதும் திமுக கூட்டணியின் பிரச்சார பீரங்கியாக செயல்படப் போவதாகவும் வைகோ அறிவித்திருந்தார். அதனால் மக்களவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் மதிமுக தொண்டர்கள் இருந்தனர். கடைசியில் 1+1 என்ற நிலைக்கு மதிமுக தள்ளப்பட்டு அதனை வைகோவும் சம்மதித்தது மதிமுக கீழ் மட்டர நிர்வாகிகள், தொண்டர்கள் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாகி விட்டது மதிமுக நிலைமை. தனக்கு மட்டும் ராஜ்யசபா சீட்டை வைகோ உறுதி செய்து கொண்டால் போதுமா?இத்தனைக் காலம் அவர் பின்னால் அணிவகுத்து சொத்து, சுகத்தை இழந்தது தான் மிச்சம் என்று மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கொந்தளிப்பில் உள்ளனர். இதற்குப் பேசாமல் மதிமுகவை திமுகவில் இணைத்து விட்டுச் செல்வது ரொம்பத் தேவலை என்று வைகோவுக்கு எதிராக கலகக்குரல் எழுப்பியுள்ளனர்.
மதுரையிலோ திமுக வேண்டாம் என்று வைகோ பின்னால் அணிவகுத்தோம். இனியும் அவரை நம்பத் தயாரில்லை என்று கூறி கீழ்மட்ட நிர்வாகிகள் பலர் மதிமுகவில் இருந்து விலகி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் நேற்று முதல் இணைந்து வருகின்றனர்
மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் போட்டியிடும் மதிமுகவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் திமுக நெருக்கடி கொடுத்துள்ளது. இது குறித்து சென்னையில் மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வைகோ ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது வைகோவுக்கு எதிராக கலகக் குரல் கட்டாயம் எழும் என்றும் அதிருப்தியில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர்.