திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த ஏதுவாக வழக்கை வாபஸ் பெறுவதாக திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்த டாக்டர் சரவணன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் காலியாக இருந்த 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 -ல் மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உத் தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தேர்தல் இல்லை என அறிவிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த 2016 நவம்பரில் நடந்த இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளராக போட்டியிட்ட டாக்டர் சரவணன் வழக்குத் தொடர்ந்திருந்தார். ஏ.கே.போசுக்கு கொடுத்த கட்சியின் அங்கீகாரக் கடிதத்தில் அப்போது மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவின் கைரேகையில் சந்தேகம் எழுப்பி டாக்டர் சரவணன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து முடிந்து ஓராண்டுக்கும் மேலாக தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளது.
வழக்கைக் காரணம் காட்டி இடைத்தேர்தல் நடத்தாததால் தீர்ப்பை உடனடியாக அறிவிக்கக் கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் சரவணன் முறையிட்டார். தற்போது தான் தொடர்ந்த வழக்கையே வாபஸ் பெறுவதாகவும், உடனே தேர்தலை அறிவியுங்கள் என்று தலைமை தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் டாக்டர் சரவணன் கடிதம் எழுதியுள்ளார்