அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளைப் பெற்றுள்ள பாஜகவில் வேட்பாளர் தேர்வில் கோவை, ராமநாதபுரம் தொகுதிகளுக்கு பெரும் அடிதடியாகவே உள்ளது. முதலில் கோவையைக் குறிவைத்த வானதி இப்போது ராமநாதபுரம் தொகுதியைக் கேட்டு அடம் பிடிக்க அங்கும் நயினார் நாகேந்திரன் பிடிவாதம் காட்டுவதால் டெல்லியில் பஞ்சாயத்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கோவையுடன் நீலகிரியும் முதலில் ஒதுக்கப்பட, தனித் தொகுதியில் போட்டியிட மறுத்த பாஜக தரப்பு அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து ராமநாதபுரத்தை ஒதுக்கச் செய்து விட்டது.கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதி தற்போதைய சிட்டிங் எம்.பியும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்குத் தான் என்பது உறுதி. தூத்துக்குடியில் தமிழிசையும், சிவகங்கையில் எச்.ராஜாவும் போட்டி போடுவதும் கிட்டத்தட்ட முடிவாகி விட்டதாம்.
கோவை, ராமநாதபுரம் ஆகிய இரு தொகுதிகளில் ஒன்றை தனக்கு ஓதுக்கியே ஆகவேண்டும் என வானதி சீனிவாசன், டெல்லியில் முகாமிட்டு ஒற்றைக் காலில் தவமிருக்கிறாராம்.
கோவையில் முன்னாள் எம்.பி. சி.பி. ராதாகிருஷ்ணனும், ராமநாதபுரத்தில் அதிமுகவில் இருந்து பாஜக பக்கம் தாவிய முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனும் விடாப்பிடியாக தங்களுக்குத்தான் வேண்டும் என பிடிவாதம் காட்டுவதால் பாஜகவில் வேட்பாளர் அறிவிப்பு தாமதமாகி வருகிறது. இதனால் இன்று டெல்லியில் அமித் ஷா முன்னிலையில் நடக்கும் தமிழக பாஜக தலைவர்களுடனான பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது