தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது.
இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறும் 97 தொகுதிகளுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதியில் மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இன்று முதல் வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன.
மனுத்தாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாளாகும். 27-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். 29-ந்தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். வேலை நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாம்.
மனுத்தாக்கல் செய்பவருடன் நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.அதேபோல் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
வேட்பு மனுவைத் தாக்கல் செய்பவர்கள் தங்கள் 5 ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்யவேண்டும். வேட்பு மனுத்தாக்கல் செய்பவர் தனது மீது குற்ற வழக்குகள் இருந்தாலோ அல்லது தண்டிக்கப்பட்டிருந்தாலோ அதனையும் வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும் எனவும் சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.