இந்தியாவில் சுழற்சி முறையில் பிரதமர் தேர்வு செய்யப்பட்ட வேண்டும் என சீமான் அறிவுறுத்தியுள்ளார்.
மக்களவை தேர்தல் களம் களைகட்டியுள்ளது. பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டியும் வருகின்றனர். அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் தேர்தல் பரப்புரைகள் நடந்து வருகிறது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது, பேசிய அவர், ‘ஓட்டுக்குக்கா காசு கொடுக்காமல், உங்கள் பிள்ளைகளைத் தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற்றுக் காட்டுவீர்களா?
தமிழகத்தின் பெரிய கட்சிகள், நல்லாட்சி வழங்கிய கட்சிகள் ஏன் தேர்தலில் தனித்துப் போட்டியிடவில்லை? என்ற கேள்வியை எழுப்பினார். பின்னர், ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.15 லட்சம் போடுவேன் என்று சொன்னார் மோடி. ஆனால், அப்பத்தா சுருக்குப் பையில் இருந்த பணத்தையும்கூட மோடி விட்டுவைக்கவில்லை. அதையும் எடுத்துக் கொண்டார். நாட்டின் கஜானாவை காலி செய்யவே மோடியும், ராகுலும் போட்டிப் போடுகிறார்கள். சுழற்சி முறையில் பிரதமர் தேர்வு செய்யப்பட்ட வேண்டும். பொதுமக்களை மட்டும் நம்பி நாம் தமிழர் கட்சி தேர்தலில் இறங்கியுள்ளது’ என சீமான் பேசினார்.