வெட்ட வெளியில்... சுட்டெரிக்கும் வெயிலில்...ஆடு, மாடுகளா வாக்காளர்கள்..? பிரச்சார யுக்திகள் மாறுவது எப்போது

can political leaders change their campaign plan

by Nagaraj, Apr 2, 2019, 10:43 AM IST

எந்த ஆண்டும் இல்லாத அளவு வெயில் இப்போது கொளுத்துகிறது. வெயிலை விட எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் களம் கொதிநிலைக்கு சென்றுள்ளது. இதில் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு கூட்டம் சேர்க்கிறேன் பேர்வழி என்று மகா பொது ஜன வாக்காளர்களை ஆடு, மாடுகளைப் போல் வெட்ட வெளியில், கொளுத்தும் வெயிலில் அமர வைப்பது தான் இந்தத் தேர்தலில் பெரும் கொடுமையிலும் கொடுமையாக உள்ளது.

இதற்கு முன் நடந்த தேர்தல்களில் பொதுக் கூட்டம் என்றால் இரவில் தான் நடக்கும். விடிய, விடிய பொதுக் கூட்டங்கள் நடைபெற்ற வரலாறும் உண்டு. திருவிழா, நாடகம், சினிமாவுக்கு செல்வது போல் மக்களும் தன்னெழுச்சியாக தலைவர்களின் கூட்டங்களுக்கு சென்ற காலமது. என்றைக்கு தேர்தல் ஆணையம் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததோ அன்றே பிரச்சார யுக்திகளும் மாறிவிட்டன.

தற்போது நடைபெற உள்ள தேர்தல் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் வாழ்வா? சாவா?போராட்டம் போன்றாகிவிட்டதால் பிரச்சாரத்திலும் அனல் பறக்கத் தொடங்கி விட்டது. அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஊர், ஊராக டூர் கிளம்பி விட்டனர். தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் வேன் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்.

திமுக தரப்பில் மு.க.ஸ்டாலின் தான் ஸ்டார் பேச்சாளராக வலம் வருகிறார். மற்றொரு பக்கம் மதிமுக பொதுச் செயலாளர் வேன் மூலம் திமுக கூட்டணிக்காக கர்ஜித்து வருகிறார். நாம் தமிழர் சீமான், மக்கள் நீதி மய்யம் கமல் ஆகியோரும் பயணத் திட்டம் வகுத்து பிரச்சாரத்திற்கு கிளம்பி விட்டனர். பாஜக, காங்கிரஸ் தரப்பில் முக்கியத் தலைகள் தங்களுக்கு சீட் வாங்கிக் கொண்டு அவரவர் தொகுதிகளில் முடங்கி விட்டனர்.

தற்போது தலைவர்களின் பிரச்சாரத்திற்கு கூட்டம் திரட்டுவது தான் ஒவ்வொரு கட்சியினருக்கும் சவாலாக உள்ளது.

காலை 10 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கும் தலைவர்கள் பகல் 2 மணி வரையிலும், பின்னர் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரையிலும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். பட்டப் பகலில், வெட்ட வெளியில், கொளுத்தும் வெயிலில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு, வாக்காளப் பெருமக்களை மணிக்கணக்கில் அமர வைக்க ஒவ்வொரு கட்சியினரும் படாத பாடுபடுகின்றனர்.

காசு கொடுத்தால் மட்டுமே கூட்டம் சேர்க்க முடியும் என்ற நிலை தான் தற்போது உள்ளது. ஆனாலும் சுட்டெரிக்கும் வெயிலில் பிளாஸ்டிக் சேர்களில் மணிக்கணக்கில் அமர மக்கள் தயங்கினாலும், கூடுதல் பணம், கவனிப்பு என்று ஆசை வார்த்தை காட்டி அப்பாவி ஜனங்களை அமர வைக்கும் கொடுமை தற்போது நடந்து வருகிறது.

இன்றைக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா காலை 11.30 மணிக்கு தூத்துக்குடியிலும், பகல் 1 மணி உச்சி வெயிலில் சிவகங்கையிலும், 3 மணிக்கு கோவையிலும் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் பங்கேற்கிறார். இதில் கூட்டத்தைத் திரட்டி கெத்து காட்ட ஆளும் கட்சியும், பாஜக தரப்பும் மும்முரமாக ஈடுபட்பட்டுள்ளனர். பட்டுவாடாவும் தாராளம் என்பதால் என்ன வெயிலாக இருந்தாலும் ஆடு, மாடுகள் போல் இருக்கத் தயார் என்று அப்பாவி ஜனங்களும் படையெடுக்கின்றனர்.

இப்படி பிரச்சாரக் கூட்டம் என்ற பெயரில் ஓரிடத்தில் மக்களைத் திரட்டி கொடுமைப்படுத்தாமல், வாக்காளர்களை அவர் களின் இடத்திற்கே தேடிச் சென்று வாக்குக் கேட்கும்படியாக, பிரச்சார யுக்தியை மாற்றலாமே? என்ற குரல்கள் இந்த தேர்தலில் எழுந்துள்ளது.



You'r reading வெட்ட வெளியில்... சுட்டெரிக்கும் வெயிலில்...ஆடு, மாடுகளா வாக்காளர்கள்..? பிரச்சார யுக்திகள் மாறுவது எப்போது Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை