உத்தரப்பிரதேச மாநில மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சிலைகள் அமைக்கப்பட்டதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதே மாநில முதலமைச்சராக 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரை மாயாவதி பொறுப்பு வகித்த போது பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டு சிலைகள் அமைக்கப்பட்டன. லக்னோ, நொய்டா போன்ற இடங்களில் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷி ராம், அக்கட்சியின் சின்னமான யானை மற்றும் மாயாவதி ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2009 ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில், மக்கள் வரிப்பணத்தை பகுஜன் சமாஜ் கட்சி ஏன் திருப்பி வழங்க கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மாயாவதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சிலைகள் அமைக்கப்பட்டதை அவர் நியாயப்படுத்தியுள்ளார். மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவே சிலைகள் அமைக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் தலித் பெண்மணி எவ்வாறு முன்னேறினார் என்பதை எடுத்துக்காட்டவே தமக்கு சிலை வைக்கப்பட்டதாக மாயாவதி விளக்கமளித்துள்ளார்.
பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மக்களின் வரிப்பணத்தில் சிலைகள் அமைத்து இருப்பதாக அவர் கூறியுள்ளார். ராஜுவ் காந்தி, இந்திரா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், ஜெயலலிதா போன்றவர்களுக்கு சிலைகள், நினைவு மண்டபங்கள் எழுப்பப்பட்டது எவ்வாறு என்றும் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.