மதுரையில் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்தியனை ஆதரித்துப் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ ‘தெர்மாகோல் புராஜெக்ட்’ குறித்து விளக்கம் அளித்தார்.
தேர்தல் தேதி நெருங்கி வருவதால், அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதன்படி, தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள ஜாக்கிங் கிளப்பில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘நீர் ஆவியாவதைத் தடுக்க வெளிநாடுகளில் ரப்பர் பந்துகளை பயன்படுத்துவர். அதேபோல், வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க திட்டமிட்டோம், ரப்பர் பந்துகளை அணையில் நிரப்ப போதிய நிதி இல்லை. ஆகையால்,தெர்மாகோல்களை அணையில் நிரப்பத் திட்டமிட்டோம். பொறியாளரின் தவறினால் திட்டம் தோல்வி அடைந்தது. எனது பெயர் உலகம் முழுவதும் ‘தெர்மாகோல் செல்லூர் ராஜூ’ எனப் பரவியது என்று சிரித்தபடி பேசினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ‘மதுரையில் எருமை மாட்டைக் குளிப்பாட்டினால் கூட மக்கள் கூட்டம் திரளாக கூடும். அதனால், நடிகர் – நடிகைகளை பார்ப்பதற்காக என்றுமே ஒரு கூட்டம் இருக்கும். ஆனால், அந்த கூட்டம் என்றும் வாக்காக மாறாது’ என்று கூறினார்.