என்னையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் மு.க.ஸ்டாலின் கண்டபடி திட்டி வருவது எங்களுக்கு நல்லது. அவர் இன்னும் நல்லா திட்டினா எங்களுக்கு ஓட்டுகள் அதிகம் விழும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. கூட்டணியின் பிரசார கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் பேசுகையில் மு.க. ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் ஒரு பிடிபிடித்தார். அவர் பேசியதாவது: ராகுல் காந்தியை யாரும் பிரதமராக ஏற்கவில்லை.வறுமையை ஒழிப்போம் என்று ராகுல் காந்தி கூறுகிறார்.
உங்க கொள்ளு தாத்தா நேருவும், பாட்டி இந்திரா காந்தியும் அதைதான் சொன்னாங்க. உங்க அப்பா ராஜீவ் காந்தி, அம்மா சோனியா காந்தி அப்புறம் உங்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் அதைதான் சொன்னார்கள். இப்பம் நீங்களும் அதைத்தான் சொல்கிறீர்கள். உங்களால் வறுமையை ஒழிக்க முடியாது. தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையும்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கோபத்தில் என்னையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் கண்டபடி திட்டி வருகிறார். அவர் அப்படி திட்டி வருவது எங்களுக்குதான் நல்லது. அவர் இன்னும் நல்லா திட்டினால் ஓட்டுகள் எங்களுக்கு அதிகமாக விழும். அரசியல் நாகரீகம் தெரியாமல் மேடைக்கு மேடை மு.க.ஸ்டாலின் உளறி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.