வேலூர் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் ரூ 10.57 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இன்று தான் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் திமுக பொருளாளருமான துறைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் காட்பாடியில் உள்ள துரைமுருகனின் வீட்டிலும், அவருடைய மகன் கதிர் ஆனந்த் நடத்தும் பள்ளி, கல்லூரியிலும் கடந்த 30-ந் தேதி வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ 10 லட்சம் மட்டுமே கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இந்த சோதனை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தது.
ஆனால் அடுத்த இரு தினங்களில் துரைமுருகன் ஆதரவு திமுக நிர்வாகிகளுக்குச் சொந்தமான பல இடங்களில் அதிரடிப்படையினர் சகிதம் நுழைந்த வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். இதில் சீனிவாசன் என்ற திமுக நிர்வாகியின் சிமென்ட் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தப் பணம் வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கான ஆதாரங்களும் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதைக் காரணம் காட்டி வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் காட்பாடி வருமான வரிச் சோதனை குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று விளக்கமளித்துள்ளார். காட்பாடியில் பிடிபட்ட ரூ.10.57 கோடிப் பணம் குறித்து போலீசார் இன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கின்றனர். போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்படும். அதன் பேரில் தலைமை தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என்று சத்யபிரதா சாகு தெரிவித்தள்ளார்.
இந்நிலையில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து அத்துறையின் தலைமை அதிகாரியை வரவழைத்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாகிறதா..? - தலைமை தேர்தல் ஆணையம் நாளை முடிவு