‘மக்களவைத் தேர்தலில் என்னுடைய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஏற்கனவே தெரிவித்துவிட்டேன்’ என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர் முருகதாஸ் – ரஜினி கூட்டணியில் உருவாகும் படத்துக்கு ‘தர்பார்’ எனத் தலைப்பிட்டு, அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. படத்தின் தலைப்பு வெளியான அடுத்த வினாடி, ஃபேஸ் புக், ட்விட்டர், இஸ்டா என வலைதளங்களில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தெறிக்க விட்டனர் ரஜினி ரசிகர்கள். இந்திய அளவில் ட்விட்டரில் #Darbar ட்ரெண்டாக உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,படம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ரஜினி ‘தர்பார்’ என்ற படத்தின் தலைப்பு அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்றார். அவரிடம், அரசியலில் பிரவேசித்துள்ள கமல்ஹாசனுக்கு தங்களுடைய ஆதரவு உள்ளதா? கமலின் அரசியல் பயணம் குறித்த உங்கள் பார்வை என்ன? உள்ளிட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், ‘மக்களவைத் தேர்தலில் என்னுடைய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். அதில், எந்த மாற்றமும் இல்லை. இதற்கு மேல், இது தொடர்பாக எதுவும் பேச விரும்பவில்லை. இதைப் பெரிதாகி நமது நட்பை சீர்குலைத்திட வேண்டாம்’ என்றவரிடம்,
பாஜக தேர்தல் அறிக்கை தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘நேற்று வெளியான பாஜக தேர்தல் அறிக்கையில், நாட்டில் உள்ள நதிகளை இணைக்கத் தனி ஆணையம் அமைக்கப்படும் என்ற பாஜக தேர்தல் வாக்குறுதி வரவேற்கத்தக்கது. நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கோரிக்கை, இது தொடர்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் நான் பேசியிருக்கிறேன். இந்தியாவில் உள்ள நதிகளை இணைத்துவிட்டாலே பாதி வறுமை ஒளியும்’ எனப் பதிலளித்தார்.
விக்னேஷ் சிவனுக்காக பல லட்சம் ரூபாய் செலவில் ரூம் போட்ட லைகா நிறுவனம்