கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் அம்மாநில அமைச்சர் ஒருவர் பாம்பு டான்ஸ் ஆடி மக்களிடம் ஓட்டு வேட்டையாடியது வைரலாக பரவி வருகிறது.
தேர்தல் நேரத்தில் ஏதாவது வித்தியாசமாக செய்து மக்களை தங்கள் பக்கம் இழுக்கின்றனர் சில வேட்பாளர்கள். அது மாதிரி சற்று வித்தியாசமாக பாம்பு டான்ஸ் ஆடி தனது கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார் கர்நாடக அமைச்சர் ஒருவர்.
கர்நாடக மாநிலம் ஒசகோட்டையை சேர்ந்வர் எம்.டி.பி. நாகராஜ். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர் தற்போது அம்மாநில வீட்டு வசதித்துறை அமைச்சராக உள்ளார். மக்களவை தேர்தலை முன்னிட்டு நாகராஜ் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாநில முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
ஒவ்வொரு இடங்களுக்கும் செல்லும் போது, அந்த பகுதிவாசி போலவே மாறி விடுவார். மேலும், அங்குள்ள மக்களை ஈர்க்கும் வகையில் ஏதாவது வித்தியாசமாக செய்து அசத்தி விடுவார். சிக்கபள்ளாபுரா மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வீரப்ப மொய்லியை ஆதரித்து அந்த பகுதியில் அமைச்சர் நாகராஜ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கட்டேனஹள்ளி பகுதிக்கு அவர் வந்த போது அவர் உற்சாகமாக காணப்பட்டார்.
அப்போது மேளதாளங்களின் இசை களைகட்டியது, தொண்டர்களும் குத்தாட்டம் போட்டனர். இதனை பார்த்த அமைச்சர் நாகராஜ் உற்சாகமாகி தொண்டர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். நாகினி நாடகத்தில் வரும் பாம்பு டான்ஸ் போல் உடலை வளைத்து நெளித்து ஆடி மக்களை கவர்ந்தார். தற்போது இதுதான் கர்நாடகாவில் வைரலாக பரவி வருகிறது.