பாஜக தமிழக தலைவர் தமிழிசையின் ட்விட்டர் பதிவு ஒன்று கேலிக்குள்ளாகியுள்ளது.
பாஜக தமிழக தலைவர் தமிழிசை தூத்துக்குடி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இதற்காக தீவிர பிரச்சாரமும் செய்து வருகிறார். ஏற்கனவே அவருக்கு ஆதரவாக அமித் ஷா பிரச்சாரம் செய்து முடித்துவிட்ட நிலையில் விரைவில் பிரதமர் மோடியும் பிரச்சாரம் செய்ய உள்ளார் எனக் கூறப்படுகிறது. தமிழிசையை எதிர்த்து கனிமொழியும் களமிறங்கியுள்ளதால் தூத்துக்குடியில் போட்டி பலமாகியுள்ளது. இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளில் தாக்கி பேசி வருகின்றனர்.
இந்நிலையில் பிரச்சார நிலவரங்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிசை பதிவிட்டு வருகிறார். அப்படி இன்று ஒரு பதிவை அவர் இட்டார். அதில், ``தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட போடுபட்டி கிராமத்தில் இரட்டை இலை தாமரையை மலர வைத்து வரவேற்பளித்த சகோதரிகளுக்கு நன்றி..." எனக் குறிப்பிட்டிருந்தார். கூடவே அந்தப் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். ஆனால் அந்தப் புகைப்படத்தில் இலைகளுக்கு நடுவே தாமரைக்கு பதிலாக பல்லாரி வெங்காயத்தை பிரித்து வைத்திருந்தனர். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.