‘‘நாங்க அம்மா சொன்ன திட்டங்களைத்தான் நிறைவேற்றி வருகிறோம். மேலே இருந்து அம்மா பார்க்கிறாங்க. அதனால பயந்துகிட்டுதான் வேலை பார்க்கிறோம்...’’ என்று சொல்கிறார் ஓ.பி.எஸ்.
தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அ.தி.மு.க., திமுக, அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தனது மகன் ரவீந்திரநாத்துக்கு வாக்குகள் கேட்டு வாடிப்பட்டியில் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘அ.தி.மு.க.வை அழிக்க துரோகிகள் முயற்சி செய்து வருகிறார்கள். ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. சுனாமி வந்தாலும் கூட இதை அழிக்க முடியாது.
நாங்கள் அம்மா கொண்டு வந்த திட்டங்களை கைவிட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் பேசுகிறார்கள். ஆனால், நாங்கள் அம்மா கொண்டு வந்த திட்டங்களைத்தான் செயல்படுத்துகிறோம். மேலே இருந்து அம்மா பார்த்து கொண்டே இருக்கிறார்கள்.
நாங்க ஒழுங்கா திட்டங்களை செயல்படுத்துகிறோமா என்று அம்மா பார்த்து கொண்டே இருப்பதால், பயந்து கொண்டே செயல்படுகிறோம்’’ என்றார் ஓ.பி.எஸ்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு, உதய் மின்திட்டம், ஜி.எஸ்.டி. உள்பட பல திட்டங்களை எதிர்த்து வந்தார். ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு அவர் எதிர்த்த திட்டங்களை எல்லாம் எடப்பாடி அரசு செயல்படுத்துகிறது என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதற்கு பதிலளிக்கும்விதமாக ஓ.பி.எஸ். பேசியுள்ளார்.