தோல்வி பயம் காரணமாக தேனி தொகுதியில் அதிமுக ஓட்டுக்கு ரூ.20 ஆயிரம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் போட்டியிடும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக-அதிமுகவுக்கு ‘டஃப்’ கொடுக்கும் வேட்பாளராக அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இதனால், தேனி தொகுதி ‘டாக் அப் தி டவுன்’ ஆக பேசப்படுகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடுகப்பட்டி, அய்யங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று வாக்கு சேகரித்தார் தங்க தமிழ்ச்செல்வன். பிரசாரத்துக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தேனி தொகுதியில் அதிமுகவினர் முதலில் ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக முடிவு செய்தனர். பின், தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தால் ஒரு ஓட்டுக்கு ரூ.20 ஆயிரம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். போலீஸ் வாகனத்தில் வைத்து பண பட்டுவாடா செய்து வருகின்றனர் அதிமுகவினர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளேன். தேர்தல் ஆணையம் இதனைக் கண்டு கொள்ளவில்லை. மோசமான அணுகுமுறை’ என்றார்.